Published on 03/03/2023 | Edited on 03/03/2023

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருத்தல வருடாந்திர திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு 34 பயணிகளுடன் படகு புறப்பட்டு சென்றுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை ஆகியவை நடைபெறும்.
இரவு 7 மணிக்கு மின் அலங்காரத்துடன் கூடிய தேரில் அந்தோணியார் வீதி உலா நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாளை காலை இலங்கை ஆயர்கள் நடத்தும் ஆராதனை விழாவில் சிங்கள மொழியில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். நாளை காலை 7.30 மணிக்கு திருவிழா நிறைவாக திருச்செபமாலையும், திருப்பலியும், கொடி இறக்கமும் நடைபெறும்.