Advertisment

”‘அக்னிபாத்’ திட்டம் இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியுள்ளது...” - கி.வீரமணி 

K Veeramani statement about agni path issue

உயிரைப் பணயம் வைத்து இராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி என்ற ஒப்பந்த முறை - இளைஞர்களை எரிச்சலுக்கு ஆளாக்கி வன்முறைப் பக்கம் தள்ளியுள்ளது. இந்த முறையைக் கைவிட்டு ஏற்கெனவே உள்ளபடி 15 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் திருத்தம் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

அவரது அறிக்கை வருமாறு: “ராணுவத்திற்கு இளைஞர்களைச் சேர்த்துப் பயிற்சியளிக்கும் ‘அக்னிபாத்’ என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. (ஒன்றிய) அரசு தொடங்கி வைத்துள்ளதில் உள்ள பல குறைபாடுகளால், நம் நாட்டில் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, அக்கிளர்ச்சியை அடக்க முயன்று, அவர்கள் எதிர்விளைவுகளில், ஆங்காங்கு கிளர்ச்சிகளில் ஈடுபட்டு இரயிலுக்குத் தீ வைக்கப்பட்டு, அரசாங்கம், இளைஞர்களின் அதிருப்தி - எதிர்ப்பு என்ற பெரு நெருப்போடு விளையாடும் ‘அக்னிபாத்’ என்ற ‘நெருப்புப் பாதை’யாக வட மாநிலங்களில் பல நகரங்களில் பரவி வருவது மிகவும் வேதனைக்கும், வருத்தத்திற்கும் உரியதாகும்.

Advertisment

மோடி அரசின் முன்யோசனையற்ற செயல்பாடுகள்

எந்த ஒரு திட்டத்தையும் நன்கு ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களது கருத்தும், இசைவும் ஏற்படுமா என்ற ஆய்வுதான் முன்னோட்டமாக இருக்கவேண்டும்; ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான அரசில், பல சட்ட மசோதாக்களும், அறிவிக்கும் திட்டங்களும் ‘தானடித்த மூப்பாகவே’ அமைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைப் படித்து உள்வாங்கி, ஆக்கப்பூர்வ கருத்துகளை எடுத்து வைப்பதைக்கூட விரும்பாமையால், அவசரக் கோலம் அள்ளித் தெளித்த நிலைதான் ஏற்படும். எடுத்துக்காட்டு, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, அவை திரும்பப் பெறப்பட்டு, பிரதமர் மோடி அதற்காக மன்னிப்பும் விவசாயிகளிடம் கோரிய நிலையும் ஏற்பட்டது.

கரோனா கொடுந்தொற்றால் 2 ஆண்டுகளாக புது வேலை வாய்ப்பு ஏற்படாதது மட்டுமல்ல; பழைய வேலைகளும் பறிபோயின. இளைஞர்கள் பலர் வேதனை, விரக்தி, மன அழுத்தம் காரணமாக தற்கொலைவரைகூடச் சென்றதுண்டு. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ‘அக்னிபாத்’ இராணுவத்தில் சேர 4 ஆண்டுகள் பயிற்சியோடு இணைத்து - முடிந்துவிடுமாம். அதுகூட ஒப்பந்த முறையில் நியமனங்கள். முன்பு இருந்த சட்ட நிலையின்படி, 15 ஆண்டுகள் சேவை அதன் பிறகு அவர்களுக்கு ஓய்வூயதியம் (பென்ஷன்) உண்டு.

இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பதா?

உயிரைத் துச்சமெனக் கருதி களத்தில் நிற்கும் இளைஞர்கள் ஓர் அர்ப்பணிப்போடு பணி செய்து, பனி மலையிலும் உயிர்க்கொல்லி சூழலிலும் பணி செய்வது பெரும்பேறு என்ற எண்ணத்தோடு பணி செய்யும் நிலையை மாற்றி, முதலில் 4 ஆண்டுகள், பிறகு அனுப்பிவிட்டு, அதன் பிறகு அவர்களில் தகுதி பார்த்து சிலரை மீண்டும் இராணுவத்திற்கு எடுப்பது என்பதெல்லாம் முறையற்ற முறை என்பது நாட்டில் பல அறிஞர்கள், வல்லுநர்களின் கருத்து.

பல ஆண்டுகாலம் வேலை கிட்டா வேதனைக்கு விடியல் இந்த 4 ஆண்டுகள், அதுவும் ஒப்பந்த முறைமூலம் தீர்வு ஒருபோதும் ஏற்படவே ஏற்படாது. உயிர்த் தியாகம் செய்யும், கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு உயர் தொண்டு பணியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அந்தப் பணி நிரந்தரமல்ல என்பதும், அது அரசாங்கத்தின் ஒப்பந்தப் பணி (Contract Labour) என்பதாக இருப்பதும் எவ்வகையில் நியாயமானது?

இளைஞர்களின் குமுறலில் நியாயம் இருக்கிறது

இளைஞர்களின் குமுறல், ஆத்திரம் நியாயம்தானே! அதற்காக வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்றாலும், உணர்ச்சிவயப்பட்ட அவ்வகையில் உள்ள அந்த இளைஞர்களின் விரக்தி - வேதனை கடந்த பல ஆண்டுகளாக வறுமை காரணமாக ஏற்பட்ட மன வலி; இவற்றால் அவர்கள் இப்படி நெருப்பு வைக்கும் பாதையில் தங்களையும் அறியாமல் ஈடுபட வைப்பதற்கு மூலம் ஒன்றிய அரசின் தவறான நியமன முறை முடிவுதானே.

ஆர்.எஸ்.எஸ். திட்டம் இதில் மறைமுகமான திட்டமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். பயிற்சி ஷாகா நடத்திய இளைஞர்கள், பயிற்றுவித்த அவர்களை மட்டும் இராணுவத்தில் நுழைக்கும் சூழ்ச்சியும் இதில் பதுங்கி இருக்கிறது எனப் பலராலும் விமர்சிக்கப்படுவதில் அறவே உண்மையில்லை என்று புறந்தள்ளிவிட முடியாது.

ஹிந்துவை இராணுவ மயமாக்குவது என்ற திட்டம்

காரணம், ‘ஹிந்துத்துவா’ நூலின்படி (1922 இல் எழுதப்பட்டு, தற்போது சரியாக 100 ஆண்டுகள்) ‘ஹிந்துத்துவாவை’ நிலைநாட்டிப் பாதுகாக்க ‘’Militarize Hindu; Hindurise Military’’ - ‘ஹிந்துவை இராணுவமயமாக்கு; இராணுவத்தை ஹிந்துமயமாக்கு’ என்ற கருத்தியலை விதித்துள்ளதின் செயலாக்கம்தான் இந்த 4 ஆண்டு இராணுவப் பயிற்சி - அதுவும் காண்ட்ராக்ட்மூலம் என்பது, ஒப்பந்தம் மூலம் இராணுவ வீரர்கள் சேர்க்கப்பட்டால், அவர்களுக்குப் பணியில் ஈடுபாடு ஏற்படுமா? சேவை உணர்வு வருமா? நாட்டின் பாதுகாப்பை இந்த முறையில் குளறுபடிகள் நிறைந்தவைகளாக ஒன்றிய அரசும், பாதுகாப்புத் துறையும் ஆக்குவது ஏற்கத்தக்கதா.

நாட்டில் காட்டுத்தீபோல பரவும் இளைஞர்களின் கிளர்ச்சியை தவிர்க்க ஒரே வழிதான் உண்டு. 15 ஆண்டு பணி என்ற பழைய நிலை தொடரட்டும். அந்தத் திட்டத்தையே கைவிட்டு, பழைய நிலையையே (நிரந்தரப் பணி) - 15 ஆண்டு - ஓய்வூதியம் என்பது போன்ற விதிகளுடன் செயல்படட்டும். புதிய நியமன முறையை உடனடியாக நிறுத்தி வைத்தோ, திரும்பப் பெற்றோ, நாட்டில் பரவும் சட்டம் - ஒழுங்கு முறையைக் கேள்விக் குறியாக்கும் நிலையைத் தவிர்க்க, காலதாமதம் ஆகாமல் முடிவினை எடுக்கவேண்டும்; இதில் வறட்டுப் பிடிவாதம் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். நெருப்போடு விளையாடுவதுபோல இளைஞர்களின் உணர்வை மதிக்காத போக்கு. மறுபரிசீலனை கட்டாயம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe