Advertisment

மனுதர்மசாஸ்திரம் நகல் எரிப்புப் போராட்டம் - கி.வீரமணி கைது

K. Veeramani

Advertisment

மனு தர்மசாஸ்திரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதனை நகலை எரிக்கும் போராட்டம் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மணியம்மை சிலை அருகே நடந்தது. மனுதர்ம எரிப்புப் போராட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது

உலகில் எங்கும் இல்லாத கொடுமையான ஜாதிய அமைப்பு, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுகின்ற இந்து மதம், அதனுடைய மிக முக்கியமாக சாஸ்திரமாக இருக்கக்கூடிய மனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.

மனுதர்ம அடிப்படையில்தான், இந்து லா சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனுதர்மத்தைப் பொருத்தவரையில், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, தொடக்கூடிய ஜாதி - தொடக்கூடாத ஜாதி, பார்க்கக்கூடாத ஜாதி - பார்க்கக்கூடிய ஜாதி என்று பிரித்திருப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து, பிறவியில் ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் அடிமைகள்; எந்தக் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்; கல்வி அறிவு பெறக்கூடாதவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, சூத்திரர்கள் என்று மிகப்பெரும்பாலான உழைக்கின்ற மக்களை, காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆக்கி வைத்துள்ளது மனுதர்மமே! அதனுடைய அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

மனுதர்மம் என்ன சொல்லுகிறது?

Advertisment

8 ஆவது அத்தியாயம்; 415 ஆம் சுலோகத்தில் மனுதர்மத்தில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்கிறோம்.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்

பக்தியினால் வேலை செய்கிறவன்

தன்னுடைய தேவடியாள் மகன்

விலைக்கு வாங்கப்பட்டவன்

ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்

குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என்று சூத்திரர்களுக்குப் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

இதைவிட மானக்கேடு, இதைவிட அவமானம் வேறு இருக்க முடியுமா?

K. Veeramani

ஆகவேதான், மனுதர்மம் ஜாதியைப் பாதுகாப்பது, நம்முடைய பெரும்பாலான உழைக்கின்ற மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பெயர் சொல்லி, அவர்களை காலங்காலமாக அடக்கி வைத்ததினுடைய விளைவுதான் - நம்முடைய மக்கள் இந்த மண்ணுக்குரியவர்களாக, பெரும்பான்மை மக்களாக இருந்தும்கூட, அவர்கள் மேலே வர இயலாத ஒரு சூழல் அடக்குமுறை ஏற்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு மிக முக்கியமான ஒரு செய்தி; மனுதர்மத்தை எரிப்பதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குச் சொல்கிறேன்.

மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாகக் கொண்டு வரவேண்டுமாம்!

நாளைக்கு மீண்டும் பெருபான்மையோடு மத்தியில் மோடி அரசு - பா.ஜ.க. அரசு - ஆர்.எஸ்.எஸ். அரசு ஆட்சிக்கு வருமேயானால், அவர்கள் ஏற்கெனவே சொன்னபடி, அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றை சொல்லுகின்ற இன்றைய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்த மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாக வைக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள்; ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களின் குருநாதர் கோல்வால்கரும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.

எனவேதான், இந்த ஆபத்தை உணர்த்துவதற்காக, மனு அநீதி, மனுதர்மம் மனித தர்மத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் இந்த மனுதர்ம எரிப்பு நடைபெறுகிறது.

டில்லியிலுள்ள மாணவர்களும், இளைஞர்களும்...!

அண்மையில் டில்லிக்குச் சென்றபொழுது, அங்கே இருக்கின்ற மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் இதுபற்றி கேட்டார்கள்; நாங்களும் பின்பற்றவிருக்கிறோம் என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.

இங்கு வைத்தது ஜாதிக்கு வைத்த தீ!

வருணாசிரம தர்மத்திற்கு வைத்த தீ!

அநீதிக்கு வைத்த தீ!

K. Veeramani

எனவேதான், நாங்கள் பொதுச்சொத்துக்கு நாசமில்லாமல், பொது அமைதிக்குப் பங்கமில்லாமல், மிகத் தெளிவாக இங்கே ஒரு பக்கெட்டில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்திருக்கிறோம்; இன்னொரு பக்கெட்டில் மணலைக் கொண்டு வந்து வைத்திருக்கிறோம்.

எங்களுக்கு ஜாதி அழியவேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும்

இந்த மனுதர்ம எரிப்பினால், அரசு உடைமைகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் முன்னேற்பாடோடு தந்தை பெரியார் அவர்கள் எப்படி அமைதியாக எரிப்புப் போராட்டத்தினை நடத்துவார்களோ, அதேபோன்று இந்த எரிப்புப் போராட்டத்தினை நடத்தியிருக்கின்றோம். காவல்துறையை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல. தமிழக அரசின்மீதோ, மத்திய அரசின்மீதோ உள்ள வெறுப்பினாலும் அல்ல - எங்களுக்கு ஜாதி அழியவேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும்; பெண்கள் உரிமைப் பாதுகாக்கப்படவேண்டும்.

வேரடி மண்ணோடு அகற்றப்படவேண்டும்

அதுமட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக, மீண்டும் மனுதர்மத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லுகின்ற எண்ணம் வேரடி மண்ணோடு அகற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் இன்றைய இந்தப் போராட்டம். இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம்!

இவ்வாறு கூறினார்.

Chennai protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe