Skip to main content

செம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகளை மூன்று ஆண்டுகளாக வழங்காதது ஏன்? கி.வீரமணி 

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
K. Veeramani



செம்மொழி தமிழுக்கான குடியரசு தலைவர் விருதுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்காதது ஏன்? அதேபோல, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படவேண்டிய விருதையும் நிறுத்தி வைத்திருப்பது - தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே புறக்கணிப்பு என்ற நிலைதானே - மாநில அரசும் இதுகுறித்து கவனம் கொள்ளாதது ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 9 ஆம் தேதி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 

 

தமிழுக்கு இடம் இல்லையே, ஏன்?
 

இந்தியாவில் உள்ள பல மொழிகளை சேர்ந்த அறிஞர்களுக்கு கவுரவ சான்றிதழ், குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுவது தொடர்பான விளம்பரம் இது.

சமஸ்கிருதத்தில் தொடங்கி பல மொழிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதில் செம்மொழியான தமிழ் மட்டும் இடம்பெறவில்லை.


12.10.2004 இல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யத்தை மைசூரில் உள்ள இந்திய மொழிகளில் நடுவண் நிறுவனத்தில் தொடங்கியது. 2008 மே 19 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தன்னாட்சி நிறுவனமாக சென்னையில் நிறுவப்பட்டது.
 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடு யாது?
 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமாக செயல்படுவதால், குடியரசுத் தலைவருக்கான விருது விளம்பரத்தை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமே அறிவிக்கும் என்று தோழர் இரவிக்குமார் எம்.பி.,  (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர்) அவர்களுக்கு, இந்நிறுவனத்தின் இயக்குநர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

அதன் பிறகு, நேற்று (12.5.2020)  2019-2020-க்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
 

அதேநேரத்தில், செம்மொழித் தமிழுக்கு - 2016-2017, 2017-2018, 2018-2019 ஆகிய மூன்றாண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் விருதுகளுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, குழு கூடி முடிவெடுக்கப்பட்ட பின்பும், இதுவரை அறிவிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே 2019-2020 ஆம் ஆண்டுக்கு மற்ற மொழிகளுக்கான விளம்பரத்தையும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டு விட்டது.
 

கலைஞர் உருவாக்கிய அறக்கட்டளை சார்பில் வழங்கவேண்டிய விருது என்னாயிற்று?
 

அதேபோல, தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தம் சொந்த நிதியாக ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையினை அளித்தார் (24.7.2008).
 

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை என்று அதற்குப் பெயரும் சூட்டப் பட்டது.
 

இந்தியாவிலேயே இது மிக உயரிய விருது என்று கருதப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், அய்ம்பொன்னாலான திருவள்ளுவர் சிலையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும் - செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுவதாகும்.


தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழி பெயர்ப்பு, நுண்கலைகள் இவற்றில் பெரும் புலமை வாய்ந்த தனியொரு படைப்புக்கோ, தனித்தன்மை வாய்ந்த சிறப்புமிக்க பன்னாட்டு ஏற்புப் பெற்ற ஒருவரின் வாழ்நாள் பங்களிப்பிற்கோ இவ்விருது வழங்கப்படும்.
 

 

முதல் விருது கோவை செம்மொழி  மாநாட்டில் வழங்கப்பட்டது
 

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 அன்று இந்த விருது வழங்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டது. முதல் விருது கோவையில் 2010 ஜூன் மாதம் நடத்தப் பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலோ என்னும் பின்லாந்து நாட்டுக்காரருக்கு வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு 2010 ஆம் ஆண்டுமுதல் 2019 ஆம் ஆண்டுவரைக்கான விருதுகள் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
 

ஏனிந்த தாமதம் - முடக்கம்?
 

ஏனிந்த தாமதம்? தமிழ் செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளிக்கப்படவில்லை. அதேபோல, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஒரு கோடி ரூபாய் தந்து உருவாக்கிய அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் விருதும் கடந்த 9 ஆண்டுகளாக அளிக்கப்படவில்லை.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே ஒரு புறக் கணிப்புதான் என்ற எண்ணத்தைத்தானே இது காட்டுகிறது.
 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்  பெயர் அளவுக்குத்தானா?
 

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது பெயரளவுக்குத்தான் நடைபெறுகிறது. மாதம் 12 லட்சம் ரூபாய் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது. ஆனால், செயல்பாட்டைத்தான் காணோம்.
 

வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
 

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக நாம் சுட்டிக்காட்டிய தவறுகள் திருத்தப்பட்டு,  தமிழ் மொழிக்கான முந்தைய ஆண்டு விருதுகளும், நடப்பாண்டிற்கான விருதுகளும், கலைஞரின் பெயரிலான விருதுகளும் அறிவிக்கப்பட்டு, விருது வழங்கும் விழா -  மத்திய அரசால் நடத்தப்படவேண்டும்.


தமிழ்நாடு அரசுக்கு இதுபற்றிய  கவலையும், பொறுப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. செம்மொழிப் பிரச்சினையில்கூட  வெறும் அரசியல் பார்வைதானா? அதனைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. இன்றைய அ.தி.மு.க. அரசு அதற்குரிய விலையை உரிய நேரத்தில் கொடுக்கவேண்டி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Chief minister MK Stalin Greetings to writer Bama 

பெண்களுக்காகக் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஆம் தேதி) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாகத் தலித் மக்களின் குரலாக ஒலித்து சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு நேற்று (07.03.2024) அறிவித்திருந்தது.

எழுத்தாளர் பாமா, பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையைத் தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய ‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட் புக்' விருதைப் பெற்றுள்ளது.

Chief minister MK Stalin Greetings to writer Bama

இந்நிலையில் எழுத்தாளர் பாமாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார். மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்து நடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.