Skip to main content

“தி.மு.க.வின் திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் காவித் திட்டம்!” - முதலமைச்சருக்கு கி.வீரமணி அறிவுரை

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

K Veeramani Condemn for Tharmapuram aadheenam issue

 

தருமபுரம் ஆதினத்தின் பண்டார சன்னதி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பவனி வருவதற்கு அனுமதி அளித்திருப்பது மனித உரிமைக்கும், நாகரிகத்திற்கும் உகந்ததல்ல. இனியாவது குறைந்தபட்சம் இதுபோன்ற மனித உரிமை மீறலை, அநாகரிகச் செயலை தடை செய்ய பொதுவாக ஆணை ஒன்றைத் தமிழ்நாடு அரசு பிறப்பிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு: தருமபுர பண்டார சன்னதி பல்லக்கில் செல்லுவது குறித்து 8.5.2022 நாளிட்ட ‘விடுதலை’யில் ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளோம். அதில் குறிப்பிட்டிருந்ததாவது: மன்னார்குடி ஜீயர் - அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் நடமாடவிட முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகின்றார் என்றால், இது 1971ஆம் ஆண்டு ஆத்திக - நாத்திகப் பிரச்சாரத்தின் ‘புதிய அவதாரம்‘தானே!’ இதன் பின்னணி, பின்பலம் எங்கே, எந்த நோக்கத்துடன் என்பது மிகவும் ஆராயத்தக்கதும், புரிந்துகொள்ளவேண்டியதும் ஆகும்!


இது முழுக்க மனிதநேய பிரச்சனையின்பாற்பட்டதாகும். தி.மு.க. ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு காவித் திட்டம்.


இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக மரியாதைக்குரிய நமது முதலமைச்சருக்கு நாம் கனிவுடன், உரிமையுடன் கொள்கை உணர்வு காரணமாக சுட்டிக்காட்டுகிறோம். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அன்று சுட்டிக்காட்டியதுபோல், பெரும்பான்மை மக்கள் நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரானவர்கள்தான் இந்த ஆன்மிக போர்வை போர்த்திய ‘நரியர்கள்!’


எனவே, இதுபற்றிய அச்சுறுத்தல்கள், அவதூறு புழுதிகள்கண்டு பின்வாங்கினால், எந்த ஒரு மாற்றமும், புரட்சிகரமான முன்னெடுப்புத் திட்டங்களும் வரும் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியும், இன்றைய முதலமைச்சரும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள். ‘‘துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு’’ நடைமுறைத் திட்டங்களில் மறுபரிசீலனை ஆட்சிக்கு இவையெல்லாம் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு ‘விடுதலை’யில் (8.5.2022) குறிப்பிட்டு இருந்தோம். ஆனாலும், நடக்கக் கூடாதது; இப்போது நடந்துவிட்டது.


இதனை எதிர்பார்க்கவில்லை. ஆன்மிகம் என்பதைவிட இதன் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என்ற அரசியல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. தங்களுக்கான வெற்றி என்று துள்ளிக் குதிப்பார்கள்; மதவெறி காவி சக்திகளும் மகிழ்வார்கள்.


முற்போக்காளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் தமிழ்நாடு அரசின் பின்வாங்குதல் இந்த பல்லக்குப் பிரச்சனையில் ஒரு தோல்வி என்று ஊடகங்கள் சித்தரிக்கக் கூடும். எப்போதுமே சமூகநீதிக்கான, மனித உரிமைப் போராட்டங்கள் உடனடியாக வெற்றியை தந்ததாக வரலாறு இல்லாவிட்டாலும், இறுதியில் சிரிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அது ஒரு புறமிருக்கட்டும். நமக்குள்ள ஆதங்கம் எல்லாம், தி.மு.க. ஆட்சிக்கு இப்படி ஒரு பின்னடைவை, களங்கத்தை, இந்தத் தடுமாற்ற முடிவு உருவாக்கிவிட்டதே என்பதுதான்!


தி.மு.க. ஆட்சி என்ற “வாராது வந்த மாமணி”யான ஆட்சியின் சாதனைகளும், புகழும் என்றும் “ஆயிரங்காலத்துப் பயிராக” அமைய வேண்டும் என்பதில் நம்மைவிட அதிக அக்கறை உள்ளவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. எனவேதான் கொள்கைச் சறுக்கல்களோ, வழுவல்களோ நடந்துவிடக் கூடாது என்பதில் நமது பார்வையும், கவலையும், பொறுப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட இனமானப் பிரச்சினையாகும்!


மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது.


மதுரை ஆதின கர்த்தர் என்னைக் கேலி செய்வதாக நினைத்து, பல்லக்கை மனிதர்கள் சுமப்பது அநாகரிகம்; மனித உரிமை பறிப்புக் கூடாது என்ற அத்துணை முற்போக்கான தலைவர்களை, சிந்தனையாளர்களைச் கேலி செய்துள்ளார். உலகம் முழுவதும் இது விளம்பரப்படுத்தப்பட்டதாம் என்று கூறுகிறார். உலகம் முழுவதும் அந்த அநாகரிகமான, மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதைக் கண்டு இப்படி இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பழைய மனித அநாகரிகங்களா? என்றுதான் முகம் சுளிப்பார்கள்; சிரிப்பார்கள் என்பதை பக்குவமடையாத பண்டார சந்நியாசி புரிந்துகொள்ள சக்தியற்ற பரிதாபத்திற்குரியவர் ஆவார்!


மனிதர்களை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் முன் வைக்கப்படுகிறது. தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன் வருகிறார்களாம். இது அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கத்தக்கதா? கைரிக்ஷாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் என்று கூறி, இன்று இழுத்தால் சட்டம் அனுமதிக்குமா? கருணைக் கொலை செய்ய, முற்றிய நோயினால் அவதியுறுகிறார்கள்; வலியும், வேதனையும் தாங்க முடியாத நிலை அவர்களுக்கு, ஆகவே, அதைச் செய்கிறோம் என்று எந்த டாக்டராவது சொன்னால் அனுமதிப்பார்களா?


குறிப்பிட்ட மாதங்களைத் தாண்டிய கருவை அதனைச் சுமப்பவர்கள் விரும்பி, தானே கருவை அழித்துக் கொள்ள விரும்புகிறார்கள் அனுமதிக்கலாமா? பெண் குழந்தைகளை கள்ளிப்பால் தந்து குடும்பத்தினர், ஏன் தாயுமே அழிக்க முன் வந்தால், சட்டமும் அரசும் அனுமதிக்குமா? மனித உரிமை மலிவான விலைச் சரக்கா? இந்த அரசு சிலரைத் ‘திருப்தி’ செய்வதற்காக அளவுக்கு அதிகமாக ‘ஆன்மிகம்‘, ‘ஆன்மிகம்‘ என்று ‘தம்பட்டம்‘ அடிக்கவேண்டுமா? தந்தை பெரியார் சொன்ன ஒரு பழமொழிதான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.


“மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?” என்பதுதான் அது. எனவே, அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியே பாதுகாப்பான நிரந்தர வழி. எதிர்ப்பை உரமாக்கி எழுவதுதான் வெற்றி உலாவுக்கு நிரந்தர வெளிச்சம் என்பதை, உங்களுக்காக என்றும் பாதுகாக்கும் ஒரு இராணுவக் கட்டுப்பாடுடன் பாடுபடும் ஒரு போராளி என்ற உரிமையுடன் மானமிகு முதலமைச்சருக்கும், மற்ற அமைச்சரவையினருக்கும் வேதனையுடன் தெரிவித்தும், நாளையும் அதே பாதையில் எங்கள் பணி, எந்த நிலைப்பாட்டிலும் விட்டுக் கொடுக்காமல் தொடரும் என்று பெரியார் வழித் தொண்டன் உறுதி கூறி முடிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.