Skip to main content

தமிழக முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்... கே.எஸ்.அழகிரி

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் கடைகளை மூடினால், தமிழ் சமுதாயத்தின் மனித வளம் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்பட்டு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதை தமிழக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குடிப்பழக்கத்தால் வாழ்க்கை இழந்து கண்ணீரும் கம்பளையுமாக நிற்கிற லட்சக்கணக்கான அபலைப்பெண்கள், விதவைகள் சார்பாக தமிழக முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


  K. S. Alagiri



கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: கடந்த 28 நாட்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சமூகத்தில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் தென்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 90 சதவீதம் கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு விட்டதாக காவல்துறை உயர் அதிகாரி கூறியிருப்பது கூடுதல் மனநிறைவை தருகிறது.


பல ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தை கவ்விக்கொண்டிருக்கும் மது அரக்கனிடமிருந்து விடுபடுவதற்கு  ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கரோனா என்கிற கொடிய தொற்றுநோயை ஒழிக்க நாம் நடத்திக்கொண்டிருக்கிற கடுமையான போரைப்போல, மது அரக்கனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழக முதலமைச்சர் ஒரு துளி மையை செலவிட்டு ஆணையில் கையொப்பமிட்டாலே தமிழகத்தில் உள்ள 5300 டாஸ்மாக் கடைகளை மே மூன்றாம் தேதியிலிருந்து மூடிவிடலாம்.

 

 nakkheeran app



தமிழக மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வாராது வந்த மாமணிபோல மக்கள் ஊரடங்கை பயன்படுத்தி மதுவிலக்கை உடனடியாக கொண்டுவரவேண்டும். குடிப்பழக்கத்தால் வாழ்க்கை இழந்து கண்ணீரும் கம்பளையுமாக நிற்கிற லட்சக்கணக்கான அபலைப்பெண்கள், விதவைகள் சார்பாக தமிழக முதலமைச்சரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நடத்துவதற்கு என்ன காரணம்? அதனால் மக்கள் பயனடைகிறார்களா? பாதிக்கப்படுகிறார்களா? குடிப்பழக்கத்தால் மக்கள் மனித வளத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை முற்றிலும் அறிந்த ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துவது ஏன்?


டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூபாய் 100 கோடி, ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய்  தமிழக அரசின் கஜானாவில் நிரம்பி, நிதி ஆதாரத்திற்கு அதிக வாய்ப்பாக இருக்கிற ஒரே காரணத்திற்காகதான் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை நாடுமுழுவதும் நடத்தி வருகிறார்கள்.


ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை நடத்தி மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபக்கம் இலவச திட்டங்களை நிறைவேற்றி மக்களின் வாக்குகளை தேர்தலில் பறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இத்தகைய இரட்டைவேட ஆட்சியை நடத்துபவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களா?  மக்கள் விரோதிகளா? என அறிய தமிழக மக்களுக்கு  வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடினால், தமிழ் சமுதாயத்தின் மனித வளம் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதை தமிழக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 

கடந்த 40 ஆண்டுகளாக மது குடிப்பழக்கத்திற்கு ஏறத்தாழ ஒன்றரைக்கோடி பேர் ஆளாகியுள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் இவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கிற நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகிற நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மன அழுத்தம், மன ரீதியாக - உடல்ரீதியாக சோர்வு, மன விரக்தி, அலைபாயும் எண்ணங்கள் - சிந்தனைகள், எரிச்சல், தூக்கமின்மை, ஆகியவற்றால் அவதிப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தருவதற்கும், உளவியல் ஆலோசனை வழங்குவதற்கும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மனநல மையங்களை உடனடியாக தொடங்கவேண்டும்.

இந்த மனநல மையங்களில் இவர்களுக்கு உரிய சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினால் இவர்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியும். இதன்மூலம் இவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சமூகத்தில் செயல்படுகிற மனிதர்களாக மாற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்திருக்கிறது. எத்தனை இலவச திட்டங்களோ, சமூக நல திட்டங்களோ நிறைவேற்றினாலும் அதன் மூலம் முழுமையாக பயன்பெறாமல் தடுப்பது பெரும்பாலான மக்களின் குடிப்பழக்கம்தான்.

எனவே சமூகத்தில் புற்று நோய்போல பரவிவரும் மதுப்பழக்கத்தில் இருந்து மது இல்லாத தமிழகம் என்ற லட்சியத்தை அடைய அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமீறலில் ஈடுபட்ட டாஸ்மாக் பார்” - குரல் கொடுத்த குடிமகன்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Tasmac Bar Irregular  Citizen Speaks Out

டாஸ்மாக் பாரில் மது அருந்தியபடியே நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர், “அண்ணே.. போதையெல்லாம் இறங்கிப்போச்சு..” என்று பேசினார். ‘கலப்படச் சரக்கா? என்ன விஷயம்?’ என்று கேட்டோம். “அதெல்லாம் இல்ல. டாஸ்மாக்ல 21 வயசுக்கு குறைவா உள்ளவங்களுக்கு சரக்கு விற்கக் கூடாதுன்னு சட்டம் சொல்லுது. ஆனா இந்த விருதுநகர் பார்ல (கடை எண் 11881) டவுசர் போட்ட சின்னப் பையனை வேலைக்கு வச்சிருக்காங்க. சிறுவன் தான் டேபிள் டேபிளா போயி பாட்டில வச்சிக்கிட்டிருக்கான். அவன் சின்னப் பையன்ங்கிறதுனால சரக்கடிக்க வந்தவங்க ஆளாளுக்கு அவனை விரட்டி வேலை வாங்குறாங்க. கண்டபடி திட்டுறாங்க.

பாக்குறதுக்கு பரிதாபமா இருக்கு. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க சட்டம் இருக்கு. டாஸ்மாக் சட்டம் வேற இருக்கு. ஆனா பாருங்க சட்டமீறலா இங்கே அநியாயம் நடக்குது. மனசு பொறுக்காமத்தான் ஒருத்தர்கிட்ட நக்கீரன் நம்பரை வாங்கி உங்ககிட்ட பேசுறேன். நான் ஒரு குடிமகன்தான். ஆனாலும் எனக்கும் மனசாட்சி இருக்குல்ல. அந்தப் பையனோட எதிர்காலத்த நெனச்சா ரொம்ப வேதனையா இருக்கு. உங்க வாட்ஸ்-ஆப் நம்பருக்கு போட்டோ எடுத்து அனுப்பிருக்கேன் சார்.” என்று நா தழுதழுக்கப் பேசினார்.

Tasmac Bar Irregular  Citizen Speaks Out

மது அருந்தினாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக நடந்துகொண்ட அந்த நபர், நம்மிடம் தன் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். “உடனே அங்கே போய் பார்த்து விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்.” என்று உறுதியளித்தார். 

Next Story

பேருந்து நிலையத்தில் மது கடத்தல்; மூன்று பெண்கள் கைது

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Liquor smuggling at bus station; Three women were arrested

மதுபான பாட்டில்களை கடத்திய பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மூன்று பெண்கள் சந்தேகத்திற்கிடமாக மூன்று பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அப்போது  அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பார்த்த அப்பெண்கள் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிக்க முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில் அந்த பைகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் முழுமையாக சோதனை செய்ததில் 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களும், சாராயமும் இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்ததோடு, இந்த மதுபாட்டில் கடத்தல் தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகையில் மூன்று பெண்கள் பேருந்து நிலையம் வழியாக மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.