ADVERTISEMENT

குடிமராமத்து பெயரில் மோசடி, கண்துடைப்பு... -மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

08:20 PM Jun 27, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விவசாய விலை பொருள்களுக்கு நியாயமான விலை கேட்டு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி, அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் நாடு முழுவதும் குடியரசு தலைவருக்கு இ-மெயில் அனுப்பும் இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், அகில இந்திய விவசாய சங்கத்தின் துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் இ-மெயில் அனுப்பும் இயக்கத்தினை சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரோனா என்ற கொடிய நோயை தடுப்பதை விட்டுவிட்டு மத்திய அரசு விவசாயிகள் மீதும், பொதுமக்கள் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. நேற்று மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதன்படி மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கும் கூட்டுறவு வங்கிகள் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் என சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அது ஏன் என்றால், அதிலுள்ள டெபாசிட் தொகை ரூ4.75லட்சம் கோடியை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு தேவையான செலவுகளை செய்வதற்கு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

அதேபோல இந்தியாவில் உள்ள கனிமவள சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதை இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசும் நோய் தொற்றை கட்டுப்படுத்திகொண்டு இருக்கிறோம் என்கிறது. ஆனால் நோயை கட்டுப்படுத்தியது மாதிரி தெரியவில்லை.

சென்னையில் மட்டும் இருந்த நோயை தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டதுதான் இவர்கள் நோயை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கேரளாவை போல் பாரம்பரிய மருத்துவத்தை இந்த நோய்க்கு பயன்படுத்த வேண்டும். இது நல்ல பலன்களை கொடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு டெங்கு காய்ச்சலுக்கு ஜெயலலிதா இருந்தபோது அரசு நிலவேம்பு கஷாயத்தை அருந்துமாறு கூறியது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்தவர்களை சிறையில் தள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறந்து தண்ணீர் காவிரி டெல்டா பகுதிக்கு வருகின்றது. முதலமைச்சரோ குடிமராமத்து பணிகளை ரூ 400 கோடிக்கு செய்து உள்ளதாக கூறுகிறார். இது கண்துடைப்பாக உள்ளது. ஆனால் எங்குமே பணி முழுமை அடையவில்லை குடிமராமத்து என்ற பெயரில் மோசடி தான் நடைபெறுகின்றது என்று குற்றம் சாட்டினார்.

மேலும் வைரஸ் தொற்று உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கிறார்கள். தமிழகத்தில் நோய் தொற்று குறித்து அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்று முதல்வர் கூறுகிறார். ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கண்டு பயப்படுகிறார் என்று தெரியவில்லை. கூட்டத்தில் எதிர் கட்சிகள் கொடுக்கும் ஆலாசனையை பரிசீலனை செய்தாலே அனைத்து பிரச்சனையும் சரியாகும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், சிபிஎம் நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி ஆதிமூலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT