K. Balakrishnan Condemned to finance minister nirmala sitharaman

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. அதே சமயம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர், “கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா?” எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தொடர்பாகப்பேசியது சர்ச்சையானது.

Advertisment

இந்த சூழலில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (23-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசும், மத்திய நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசைப் பற்றி முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசக்கூடாது. மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு எந்த மத்திய அமைச்சர் வந்தார்கள்?இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஒரு ரூபாய் கூட கூடுதல் நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. நிவாரணப் பொருட்களுக்காகவும், மீட்புப் பணிக்காகவும், தமிழக முதல்வர் ரூ.21,000 கோடி கேட்டார். ஆனால், அதற்கு மத்திய அரசு ரூ.21 கூட தரவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஏன் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கூடாது?தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். தமிழக மக்களுக்குத்தர வேண்டிய நிதியை கொடுத்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” என்று கூறினார்.

Advertisment