Skip to main content

“ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிப்பதற்கே காசிக்கு தமிழக மாணவர்களை அழைத்து செல்கிறார்கள்” - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

k balakirshnan talk about rss and rajiv case

 

‘காசி தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை ஆர்.எஸ்.எஸ். பயிற்சியளிக்க காசிக்கு அழைத்துச் சென்றால் அந்த ரயில் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மறியல் போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

திண்டுக்கல்லில் சி.பி.எம். சிறப்புப் பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கைது செய்வதும், அவர்களுடைய படகுகளைச் சேதப்படுத்துவதும், துப்பாக்கியால் சுடுவதும், அவர்களது வலைகளை அறுத்து நாசப்படுத்துவதும் என தொடர்ந்து அராஜகமாக செயல்பட்டு வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசாங்கமும்,  தமிழக முதலமைச்சரும்  ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசை தலையிடக் கோரி கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருக்கிறோம். ஏனெனில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.

 

சர்வதேச எல்லையில் கூட நமது மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. உயிரைப் பணயம் வைக்கும் மோசமான நிலை நீடிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு இந்தப் பிரச்சனையில் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தோடு ஒன்றிய,  மாநில அரசுகள் கலந்து பேசி ஒரு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்று சிபிஎம் கேட்டுக்கொள்கிறது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள 6 பேர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்யவில்லை. அமைச்சரவை மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர்களது விடுதலை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

 

மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் மனு அனுப்பினார்கள். ஆனால், கவர்னர் அவர்களது விடுதலையைத் தாமதப்படுத்தினார். அப்படி தாமதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, உச்சநீதிமன்றம் தனக்குரிய விசேஷ அந்தஸ்தை பயன்படுத்தி விடுதலை செய்கிறார்கள். 

 

இந்நிலையில், ஒன்றிய அரசு இந்தத் தீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது மத்திய சர்க்கார் கவலைப்படவில்லை. இந்த 6 பேர் விடுதலைக்கு எதிராக சீராய்வு மனுவைப் போடுகிறது ஒன்றிய அரசு. குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 14 ஆண்டுகள் கழித்து தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. அவர்கள் விடுதலையை நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். எனவே, ஒன்றிய அரசு 6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மறுசீராய்வு மனு போட்டது நியாயமில்லை. இந்த ஆறுபேரும் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு  காரணம் மத்திய அரசு தான் என்பது தெரியவருகிறது. விடுதலை தாமதமாவதற்கு கவர்னர் காரணம், குடியரசு தலைவர் காரணம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். பாஜக அரசு தான் இந்த 6 தமிழர் விடுதலை காலதாமதத்திற்கு காரணம் என்று தெரிகிறது. 

 

‘காசி தமிழ் சங்கமம்’ என்ற அமைப்பை உருவாக்கி ஐ.ஐ.டி. மற்றும் கல்லூரிகளில் பயிலும் 2500 மாணவர்களை இங்கிருந்து காசிக்கு அழைத்துச் சென்று, காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஏதோ கலாச்சாரம்,  பண்பாடு என்று சொல்லிக்கொண்டு அங்கேயே தங்கவைத்து பயிற்சியளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது மத்திய அரசாங்கத்தின் திட்டம் ஆகும். மாநில அரசாங்கத்தின் திட்டம் அல்ல. இந்தத் திட்டத்திற்கு பின் கவர்னர் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்கிறது. எனவே, கல்லூரி மாணவர்களை, குறிப்பாக ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ப்பதற்காகத்தான் இந்த முயற்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு மாணவர்களைப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

 

அங்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு எழும்பூரில் நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களுக்கும் காவித்துண்டு அணிவித்துதான் வழியனுப்புகிறார்கள். காவித்துண்டு எதற்கு அணிவிக்க வேண்டும். நமது இந்தியக் கலாச்சாரத்தில், தமிழ்க் கலாச்சாரத்தில் காவித்துண்டுதான் அடையாளமாக இருக்கிறதா? இந்தியக் கலாச்சாரத்தை காசியில் போய் என்ன கற்றுக்கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் என்ன தமிழ்க் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள போகிறார்கள். மாறுபட்ட கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. எல்லா விதமான விதிமுறைகளையும் மீறி இந்த காசி சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கூடமாக பள்ளி, கல்லூரிகளை மாற்றும் பணியில் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளார்கள். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கை பார்க்கக் கூடாது. தொடர்ந்து மாணவர்களை இவ்வாறு காசிக்கு அழைத்துச் சென்றால் அந்த ரயில் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறோம். 

 

இந்தி திணிப்பு தொடர்பாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கி மற்றும் அலுவலகங்களில் ‘இந்தி செல்’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அலுவல் மொழியாக இந்தியை எப்படி சிறப்பாகச் செயல்படுத்துவது என்பதற்காக எல்லா அலுவலகங்களிலும் ஒன்றிய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தி செல்களை கலைக்க வேண்டும் என்று சிபிஎம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் 1976ல் அலுவல் மொழி சட்டம் கொண்டு வந்த போது அந்தச் சட்ட அமலாக்கத்தில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அரசே விதிவிலக்கு கொடுத்த பிறகு இப்படி நடந்து கொள்ளலாமா? விதிவிலக்கு கொடுத்ததில் என்ன அர்த்தம் இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். இந்தி செல்களை உடனடியாக கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். பேட்டியின் போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மைப் பொதுமேலாளருமான பாண்டி,  மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.