Skip to main content

“திராவிட மாடல் ஆட்சியில் நீதி வழுவாது... தாமதம் ஆகாது”  - அமைச்சர்  கயல்விழி செல்வராஜ் உறுதி!

Published on 30/12/2024 | Edited on 30/12/2024
Justice will not slip in the Dravidian model govt will not be delayed Minister Kayalvizhi Selvaraj 

சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யபிரியா. கல்லூரி மாணவியான இவர் கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞரால் ரயில்வே தண்டவாளத்தில் வந்த ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் மாணவி சத்யபிரியாவை, சதீஷ் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார் எனத் தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். அதே சமயம் இது தொடர்பான வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சதீஷ் கடந்த 27ஆம் தேதிஅல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை குற்றவாளி என அறிவித்தார்.  மேலும் குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் டிசம்பர் 30ஆம் தேதி வழங்கப்படும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், இன்று (30.12.2024) தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில், இளம்பெண் கொலை வழக்கில் சதீஷுக்கு மரண தண்டனை விதித்தும், பெண்ணை சித்ரவதை செய்தது தொடர்பான வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டைனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருவதால் குற்றச்செயல்கள் கடந்த ஆட்சியில் இருந்ததை விட குறைந்து வருகின்றன. அது மட்டுமல்லாது வழக்கு விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை  மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளி சதீஸ்க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

2022ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த குற்றச்சம்பவம் நடைபெற்ற உடனே விரைவாக குற்றவாளி சதீஸ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டான். மேலும் முதலமைச்சரின் உத்தரவுப் படி துரிதமாக விசாரணையை மேற்கொண்ட தமிழ்நாட்டின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 70 சாட்சிகளை வழக்கில் இணைத்து குற்றவாளிக்கு எதிரான ஆதரங்களையும் உரிய வகையில் திரட்டி நீதிமன்றத்தின் முன் குற்றவாளியை நிறுத்தினர். சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் மற்றும் இதர விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Justice will not slip in the Dravidian model govt will not be delayed Minister Kayalvizhi Selvaraj 

குற்றம் நடைபெற்று 25 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. கொலைக்குற்ற வழக்கில் இவ்வளவு விரைவாக நீதி பெற்றுக்கொடுத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. மத்திய அரசின் சி.பி.ஐ. (CBI) விசாரணையில் இருக்கும் 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்னும் எந்த ஒரு முடிவும் தெரியாத சூழலில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றத்திற்கு இரண்டே ஆண்டில் தண்டனை கிடைக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் ஆட்சியில் நீதி வழுவாது.. நீதி தாமதம் ஆகாது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்