A justice for Chennai? Justice for Chidambaram? - K. Balakrishnan

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட தில்லையம்மன் கோயில் தெரு, தில்லை அம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளக்கரை, அண்ணா தெரு, அம்பேத்கார் நகர், பாலமான் பகுதி, நேரு நகர், ஈபி இறக்கம், கோவிந்தசாமி தெரு, குமரன் தெரு, மந்தகரை பகுதி, ஓம குளம் வாகீசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 850-க்கும் மேற்பட்ட பொது மக்களின் வீடுகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து வீடுகளை இழந்த பொது மக்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதனையொட்டி ஆகஸ்ட் 28-ஆம் தேதி சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சரியான முடிவு எட்டப்படாத நிலையில் அறிவித்தவாறு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

.

போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்ஜி ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோ.மாதவன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசித்ரா, முன்னாள் நகர்மன்ற தலைவர் பௌசியா பேகம், நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, நகர் குழு உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதியம் 2 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இதனை தொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, துணைக்காவல் கண்காணிப்பாளர் லாமேக், உள்ளிட்ட வருவாய் துறையினர், காவல்துறையினர், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டகுழுவினர் கலந்து கொண்டனர். இதில் சார் ஆட்சியர் 3 மாத காலத்திற்குள் மாற்று இடம் தேர்வு செய்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ‘ மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் சிதம்பரம் நகரில் மனை பட்டா இல்லாமல் குடியிருந்து வரும் மக்களுக்கு அதே இடத்தில் பட்டா வழங்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன் “சிதம்பரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்காததால் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் வீடுகளை இடித்தார்களே தவிர அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சென்னையில் இதுபோன்று வீடுகளை அகற்றும் போது அவர்களுக்கு மாற்று இடத்துடன் கூடிய வீடு வழங்கி அவர்கள் வீட்டு சாமான்களை ஏற்றி செல்ல வண்டி வாடகையும் கொடுத்துள்ளார்கள். சென்னைக்கு ஒரு நீதி? சிதம்பரத்துக்கு ஒரு நீதியா? சென்னையில் உள்ளவர்கள் மட்டும் தமிழர்களா? சிதம்பரத்தில் உள்ளவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? என கேள்வி எழுப்பினார். எனவே தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை நடத்தினோம்.

அமைதிப் பேச்சுவார்த்தையின் போது மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொலைபேசியில் என்னிடம் பேசினார். பின்னர் சார் ஆட்சியரிடம் பேசும்போது இந்த பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது விரைவில் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள் என்றார். அவரும் இது 3 மாத காலத்துக்குள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரிடம் உறுதி அளித்தார். அதனால் தற்போது போராட்டத்தை கைவிடுவதாகவும், 3 மாத காலத்திற்குள் மாற்று இடம் வழங்க வில்லை என்றால் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றார்.