Skip to main content

நீட் தேர்வு ஆய்வு குழு... மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் - உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு 

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

NEED Selection Study Group; Violation of the jurisdiction of the State Government .. Federal Government in the High Court


நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய குழு நியமித்துள்ளது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் எனவும் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு குழு நியமிக்க முடியாது எனவும் மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தாக்கல் செய்த வழக்கில், மத்திய சுகாதாரத் துறை சார்பில் அதன் சார்பு செயலாளர் சந்தன்குமார் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

 

அதில், மருத்துவப் படிப்புக்களுக்கு நீட் தேர்வு தொடர்பான சட்டமும், விதிகளும், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கூற முடியாது எனவும், பொது நலனைக் கருத்தில்கொண்டு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

நீட் தேர்வு தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது திறமையாக கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு அரசு தனியாக குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், இந்த நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய குழு நியமித்துள்ளது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் எனவும், நீட் தாக்கம் குறித்து ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு குழு நியமிக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

 

நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில், வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்