அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து, மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. கரோனா பாதிப்புகள், பொருளாதார இழப்புகளை மற்றும் இடர்களை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஊரடங்கு கட்டுப்பாட்டால் மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு அசவுகர்யங்கள் இருக்கலாம். ஆனால் வருமான இழப்பு இல்லை என்பதால் அவர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நிதியுதவி வழங்கும் திட்டம் முடிந்து விட்டதாகவும், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த நிவாரண உதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.