Judges give different judgments in the savukku  Shankar case

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு, நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில், இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, சவுக்கு சங்கரின் தாய் தரப்பில், சவுக்கு சங்கர் கருத்தால் எந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. பொது சொத்துக்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் முன் நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள், குண்டர் சட்ட உத்தரவில் குறிப்பிடவில்லை என வாதிட்டார்.

Advertisment

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அனைத்து நடைமுறையும் பின்பற்றிதான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும்தெரிவித்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் தரப்பில் முறையிடப்பட்டது. இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் செல்வி ஜார்ஜ் ஆகியோர், பிளாக்மெயிலரான சவுக்கு சங்கரால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தொடர்ச்சியாக பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மற்றும் நீதித்துறையினர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால், அவர் தண்டிக்கப்பட வேண்டிய நபர் எனத்தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இறுதி விசாரணை நடத்துவது தொடர்பாக, தங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், இந்த மனு மீது இன்று பிற்பகல்உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத்தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் இந்த வழக்கில் இரு நிதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி சுவாமிநாதன் தீர்பளித்தார். அதேசமயம் இந்தத்தீர்ப்பில் இருந்து மாறுபட்ட மற்றொரு நீதிபதியான பாலாஜி குண்டர் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் மூன்றாவது நீதிபதி விசாரணை செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,சவுக்கு சங்கர் தாய் கொடுத்த புகார் மனு குறித்து நான்கு மாதத்தில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனத்தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்