Skip to main content

அறநிலையத்துறை ஆணையர் எடுத்த நடவடிக்கையை ரத்து செய்த நீதிபதி!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

The judge who canceled the action taken by the Commissioner of Charities

 

சென்னை வடபழனி குளக்கரை பகுதியில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக அக்கோவிலின் ஆலய நிர்வாக கமிட்டிச் செயலாளர் வினாயகம் தாக்கல் செய்த மனுவில், “தனியாருக்கு சொந்தமான, தானமாக வழங்கப்பட்ட இடத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இதன் நிர்வாகத்தை தனி நபர்களே நிர்வகித்துவருகின்றனர்.

 

இந்நிலையில், கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவருவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுத்துவருகிறார். கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க, வடபழனி முருகன் கோவில் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றதும், கோவிலில் உண்டியல் வைத்துள்ளார். கோவில், எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தவரை உண்டியல் கிடையாது; கோவிலுக்கென்று எந்த நிலமோ, சொத்துக்களோ கிடையாது; நிர்வாகத்திலும் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை.

 

இந்நிலையில், கோவில் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்க நடவடிக்கை எடுத்துவரும் அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர். ஜெயபிரகாஷ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வடபழனி குளக்கரை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக, அறநிலையத்துறை ஆணையர் எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்