/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement-art_86.jpg)
சென்னையைச் சேர்ந்த ரேவதி என்பவர் பாஸ்போட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பம் அளித்திருந்தார். இருப்பினும் பாஸ்போட் அலுவலகத்தின் சார்பில் அவரது விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து இந்த விண்ணப்பத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது குறித்து ரேவதி விசாரித்துள்ளார். அப்போது அவருடைய கணவரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஸ்போட் மண்டல அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரேவதிக்கும், அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவரது கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் பாஸ்போட் வழங்கக் கணவருடைய கையெழுத்து வேண்டும் என்று வற்புறுத்தாமல் பாஸ்போட் வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (20.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “பாஸ்போட் கேட்டு விண்ணப்பிக்கக் கணவருடைய அனுமதியோ, அவருடைய கையெழுத்தோ மனைவி பெற அவசியமில்லை.
கணவருடைய கையெழுத்து பெற வேண்டும் என்று வற்புறுத்துவதன் மூலமாக ஒரு பெண்ணை கணவனுடைய உடைமையாகக் கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையை மண்டல பாஸ்போட் அதிகாரியின் செயல் காட்டுகிறது. ஏற்கனவே கணவன் மனைவி இடையான உறவில் பிரச்சனை உள்ள நிலையில் கணவனிடமிருந்து கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாது. திருமணம் ஆகிவிட்டால் பெண் தன்னுடைய அடையாளத்தை இழந்து விடுவதில்லை. கணவனின் அனுமதி கையெழுத்து இல்லாமல் மனைவி பாஸ்போட் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பதால் கணவனுடைய கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தைக் காட்டுகிறது. மனுதாருடைய விண்ணப்பத்தைப் பரிசீலித்து 4 வாரங்களில் பாஸ்போட் வழங்க வேண்டும் என்று பாஸ்போட் மண்டல அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)