Judge Anand Venkatesh says Both Northern and Southern are two petals of the same flower

காஞ்சிபுரத்தில் உள்ள அந்த 18 திவ்ய தேசங்களில் ஒன்று சின்னக்காஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீப பிரகாச கோவில் ஆகும். இந்த கோவிலின் விழாக்களின் போது கோவிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாலி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்து கோவில் செயலர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீ ரங்கவாச்சாரி, ரங்காச்சாரி சீனிவாசன் ஆகியோர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் இன்று (17.06.2025) முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “கோவிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதி அளித்து 1915ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்ஷிப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 1918ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது” என மனுதார தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “உரிமையியல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றத்தைப் பயன்படுத்த முடியாது. தீர்ப்பை அமல்படுத்தக் கூறி சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தைத் தான் அணுக முடியும்” என்று கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

மேலும், “இந்த கோவில் விழாக்களின் போது வந்து வடகலை, தென்கலை பிரிவினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தால் விழாக்கள் அமைதியாக நடக்கக் கோவில் செயல் அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். வடகலை, தென்கலை ஆகிய இரண்டும் ஒரு பூ காம்பின் இரு இதழ்கள் ஆகும். இரு பிரிவுகளும் பெருமாளுக்குச் சொந்தமானவை ஆகும். இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கம்பளத்தில் இளைப்பாறும் நிலையில் அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களைத் தவிர்த்து ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்குக் கௌரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும்” என இரு பிரிவினருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.