/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amstrongni_0.jpg)
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே(5.7.2024), பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங்கினுடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகல், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று (07-07-24) காலை 9:30 மணிக்கு சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். மாயாவதி வருகையையொட்டி, சென்னை காவல்துறையினர் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கமாண்டோ போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தி பகுதி எனக்கூறி வரைப்படங்களை சமர்பித்து வாதாடினார். அப்போது அவர், “அலுவலகம் உள்ள பகுதி மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதி. 16 அடி சாலை அருகில் நிலம் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் உள்ளன. குடியிருப்பு, குறுகலான சாலை போன்ற காரணங்களால் தான் அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் ஒரு இடம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு அடக்கம் செய்து கொள்ளலாம்” என்று கூறினார். இதனையடுத்து பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, “கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய, அருகில் வசிப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.ஆம்ஸ்ட்ராங்குக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யவே அனுமதி கோரியுள்ளோம்” என்று வாதிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-ni_17.jpg)
அதனை தொடர்ந்து நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். தற்போது அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு, உங்களுக்கு பிடித்த வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக்கொள்ளலாம். தற்போது பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது. வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டு சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிகிறேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். அடக்கம் செய்ய வேறு இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள்; நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10:30 மணிக்கு விசாரிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தர்ப்பினர் முடிவை சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)