
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்று (26/11/2021) தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை நேரில் சந்தித்த மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அவரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க விரைவில் முகாம் நடக்கும் என உறுதி தந்தார். இதையடுத்து, இரண்டாவது நாளாக நடத்திய தர்ணா போராட்டத்தை ஜோதிமணி எம்.பி. வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'ADIP' முகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் நலனில் அக்கறையுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!
நேற்றுமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் என்னோடு துணைநின்ற கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எமது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், ஊடக நண்பர்கள், காவல்துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.