பாண்டிச்சேரி அரசியலை மையப்படுத்தி தீவிர அரசியலில் இறங்குகிறார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் 2026 தேர்தலில் நேரடியாக அரசியலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ள இவர், தனிக் கட்சி துவங்கும் முடிவில் இருக்கிறார். இதற்கிடையே, பாண்டிச்சேரியின் பாஜக எம்.எல்.ஏ.வும், விரைவில் அமைச்சராகப் போகும் ஜான் குமாரின் சொந்த தொகுதியான காமராஜர் நகர் தொகுதியைக் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார் ஜோஸ் சார்லஸ். இந்த தொகுதியை அவருக்காகத் தயார்ப் படுத்தி வருகிறது அவருடைய சமூக நல அமைப்பு மார்ட்டினின் மகன் அரசியலில் நுழைவதைப் பாண்டிச்சேரி அரசியல் கட்சிகள் உற்றுக் கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்த நிலையில், லண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றம் (UK Parliament) "தேவதைகளின் பாதுகாவலர்" எனும் விருதை ஜோஸ் சார்லஸுக்கு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜார்ஜ் ஸ்மூட் மற்றும் ஆர்பிங்டனுக்கான கன்சர்வேடிவ் எம்.பி., கேரத் பேகன் ஆகியோரால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நெறிமுறைகள், இரக்கத்தில் வேரூன்றிய குழந்தைகள் நலன், சமூக அதிகாரமளித்தல், வணிகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட கூறுகளில் ஜோஸ் சார்லஸின் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் ஆராய்ந்து இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்துப் பேசியுள்ள ஜோஸ் சார்லஸ், "சார்லஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்ற முறையில் இந்த விருதைப் பெறுவதில் எனக்குப் பெருமை. ஒரு தமிழனாக எனக்குக் கிடைத்த கெளரவம் இது. தலைமை என்பது வெறும் நிறுவனத்தைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக, பச்சாதாபம், செயல் மற்றும் தலைமுறைகள் முழுவதும் தாக்கத்தைப் பற்றியது என்ற எனது நம்பிக்கையை, இந்த விருது மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.