Skip to main content

அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

 joined DMK in the presence of Minister I. Periyasamy

 

திண்டுக்கல் ஒன்றியம், அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாப்பனம்பட்டி, அச்சாம்பட்டியைச் சேர்ந்த அதிமுகவினர் 200 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அகரம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''தமிழக முதல்வரின் சிறப்புமிகு திட்டங்களால் இளைஞர் மத்தியில் நல்ல எழுச்சி வந்துள்ளது. குறிப்பாக அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்படுவதாலும், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை, விவசாயிகள், கால்நடை விவசாயிகள், கிராம மக்கள் நலன் காக்கும் துறையாக இருப்பதால் அதிக அளவில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இன்று கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்குக் கழகத் தொண்டர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பே இணைந்திருக்க வேண்டியவர்கள் சற்று தாமதமாக திமுகவில் இணைந்துள்ளார்கள். இருந்தாலும் அவர்கள் திமுகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

Next Story

“வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட அருண் நேருவுக்கு வாக்களியுங்கள்” - சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Soundarapandian MLA Propaganda in support of Arun Nehru.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் கல்லக்குடியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ. பேசியதாவது; தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3 ஆண்டுகளில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆலோசனைப்படி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான லால்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள், லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம், திருமங்கலம் பகுதியில் தடுப்பணை பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.300 கோடிக்கான திட்டங்களில் லால்குடி தாலுகா அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக இடம் ஆகியவை கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. லால்குடி தொகுதியில் 4 உயர்மட்ட பாலங்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லால்குடி நகராட்சி பகுதியில் புதிய மின்மயான பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம், நந்தியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கல்லக்குடி நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புள்ளம்பாடி பேரூராட்சியில் புதிய கழிவுநீர் வடிகால் வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புள்ளம்பாடியை மையமாக வைத்து புதிய தாலுகா அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு லால்குடி தொகுதியில் ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண்நேருவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.

இதில் புள்ளம்பாடி ஒன்றியக்குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் வடிவேலு, ஆலம்பாடி முருகன், செந்தாமரை கண்ணன், ராஜமாணிக்கம், வக்கீல் சேவியர், கல்லக்குடி நிர்வாகிகள் குமார், சையதுஒலி, அம்பேத்கர், காங்கிரஸ் பிரமுகர்கள் அடைக்கலராஜ், அடைக்கலம், வி.சி.க. நிர்வாகி விடுதலை இன்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.