Skip to main content

இளநீர் சீவ தெரியுமா?...சென்னையில் இந்த இடம் போங்க...உங்களுக்கு 32ஆயிரம்... அதிர வைத்த விளம்பரம்!

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டதோடு, வாகன உற்பத்தியையும் நாளுக்கு நாள் குறைத்து வருகின்றனர். மேலும் ஆட்டோமொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உற்பத்தியை குறைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஊழியர்களுக்கு விடுமுறையும் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.
 

tender coconut



இந்த நிலையில் செய்தி தாளில் வந்த விளம்பரம் ஒன்றில் படித்த இளைஞர்களை அதிர வைத்துள்ளது. அதில் சென்னையில் ஆழ்வார்பேட்டை பகுதியில் இளநீர் கடையில் இளநீர் சீவுவதற்கு ஆள் தேவை என்றும், அதற்கு சம்பளமாக அனுபவித்திற்கு ஏற்ப 22000 முதல் 32000 வரை சம்பளம் தரப்படும் என்று அறிவித்து இருந்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த விளம்பரத்தில் 51/31, பீமன்னா முதல் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை, தொடர்பு கொள்ளவேண்டிய மொபைல் எண்: 9840824174 என்றும் கொடுத்துள்ளனர். இந்த விளம்பர தகவலை பற்றி கேட்க போன் செய்த போது "திங்கள்கிழமை நேர்ல வாங்க சார், அந்த விளம்பரம் உண்மை தான்" என்று கடை உரிமையாளர் கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது தான் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?'-ராமதாஸ் கண்டனம்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'This is the beauty that creates job opportunities?'- Ramadoss condemned

'தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரீசியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான  ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த  ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை  செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல்,  கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூக நீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக  வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.