Jipmer holiday case closed!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி ஜிப்ம்ர் மருத்துவமனைக்கும் ஜனவரி 22 ஆம் தேதி அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, “முக்கியமான அறுவை சிகிச்சைகள் நாளை திட்டமிடப்படவில்லை. அதேசமயம், வழக்கம் போல் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படும்” என்று விளக்கம் அளித்தார். இதனை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே திட்டமிட்ட பரிசோதனைகளை நாளை (22ம் தேதி) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

Advertisment

அதேபோல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்கனவே அறிவித்திருந்த அரை நாள் விடுப்பைத் திரும்ப பெற்றது.