/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_311.jpg)
சேலத்தில், கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணம் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சின்ன கொல்லப்பட்டி ஜிவிகே நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (67). கட்டட ஒப்பந்ததாரர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மீனாட்சி சுந்தரமும் அவருடைய மனைவியும் மட்டும்தனியாக வசிக்கின்றனர். ஆகஸ்ட் 29ம் தேதி, மீனாட்சி சுந்தரம், விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ள வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு மனைவியுடன் சென்றிருந்தார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, ஆக. 31ம் தேதி அதிகாலை சேலம் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வெளிக் கதவின்பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ந்து போன தம்பதியினர், உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மீனாட்சி சுந்தரம், காவல்துறைக்குத்தகவல் அளித்தார். உதவி ஆணையர் லட்சுமி பிரியா, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் சிவகாமிமற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். வீட்டின் பீரோ, அறைக் கதவுகளின் சாவிகள் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருந்ததால் மர்ம நபர்கள் பதற்றமின்றி பீரோவை திறந்தே நகைகளைக் களவாடிச் சென்றுள்ளனர். கட்டிலுக்கு அடியில் மரப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த 8 லட்சம் ரூபாய் மற்றும் டிவி அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த 1.50 லட்சம் ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளையும் திருடியுள்ளனர்.
காவல்துறையின் மோப்ப நாய், மோப்பம் பிடித்து விடக்கூடாது என்தற்காக மர்ம நபர்கள் வீட்டில் உள்ள கழிப்பறை உள்பட அனைத்து அறைகளிலும் மிளகாய்ப்பொடியைத்தூவிவிட்டுத்தப்பிச் சென்றுள்ளனர். விரல் ரேகைப் பிரிவு நிபுணர்கள், நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களைப் பதிவு செய்தனர். காவல்துறை மோப்ப நாய், நிகழ்விடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி வந்துவிட்டது. மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினரின் நடவடிக்கைகள் மற்றும் வீட்டில் அவர்கள் சாவி, பணம் வைக்கும் இடங்களை நன்குநோட்டமிட்டவர்கள் தான் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கப்படுகிறது. திருட்டு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்ன கொல்லப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)