Sivakami

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது குவாகம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் லோகிதாஸ் மனைவி சிவகாமி (80). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். நான்கு பேருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சிவகாமி தனியாக குவாகம் காவல் நிலையம் அருகே உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் சிவகாமி வழக்கம்போல வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்று அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மர்மமான முறையில் வீட்டில் இருந்த கட்டிலில் இறந்து கிடந்தார். இதுகுறித்து குவாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள் தங்களுக்கு ஏதும் முன்விரோதம் இல்லை. ஆகையால் வழக்கு பதிவு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

Advertisment

மர்மமான முறையில் இறந்த சிவகாமியின் தலையில் லேசான காயம் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதனை தொடர்ந்து எஸ்பி உத்தரவின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிவகாமியை அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேரில் வந்து புலன் விசாரணை மேற்கொண்டனர். அக்கம் பக்கத்தினரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மூதாட்டி காதில் அணிந்து இருந்த அரை பவுன் தோடிற்காக அருகே வசிக்கும் சிறுவன் ஒருவன் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றி அந்த சிறுவனை அவர்களது வீட்டிலேயே வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அரை பவுன் நகை மற்றும் 100 ரூபாய் பணத்திற்காக மூதாட்டியை கொலை செய்ததை ஒப்பு கொண்டான், நகையை தனது தந்தையிடம் கொடுத்ததாக கூறினான். அதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தையிடம் இருந்து மூதாட்டியின் நகையை பறிமுதல் செய்தனர். இவருக்கு 8 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அந்த சிறுவன் செல்போன் உள்ளிட்ட பல்வேறு சிறிய திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்து கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.