கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்; கடலில் நீராடியவர்களுக்கு உடல் அரிப்பு - பதறிய பக்தர்கள்!

Jellyfish suddenly washed ashore on the Tiruchendur beach

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளி மாநிலம் வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து பின்னர் முருகப் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.சுவாமி தரிசனத்துக்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் மணிக்கணக்கில் அமர்ந்து காற்று வாங்கியும், கடல் அலையில் விளையாடியும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வது வழக்கம்.

பொதுவாக திருச்செந்தூர் கடற்கரையில் அலை அதிகம் அடித்தாலோ, கடலில் காற்றின் வேகம் அதிகரித்து இருந்தாலோ மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட பல வகையான கடல் வாழ் உயிரினங்கள் திசை மாறி கடற்கரை நோக்கி வரும். பின்னர் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். இந்நிலையில், காலநிலை மாற்றத்தினால் தற்போது தமிழ் மாதங்களில் பெளர்ணமி, அமாவாசை, சஷ்டி திதி போன்ற நாள்களில் திருச்செந்தூர் கடலில் மாற்றம் ஏற்பட்டு கடல் நீர் 50 அடி முதல் 100 அடி வரை உள் வாங்கி காணப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அப்போது பாசி படர்ந்த பச்சை பாறைகள் வெளியே தென்படும். அடுத்த சில நாள்களில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

Jellyfish suddenly washed ashore on the Tiruchendur beach

இந்நிலையில் சனிக்கிழமை(31.5.2025) வைகாசி மாத வளர்பிறை சஷ்டி திதி இரவு 1.27க்கு தொடங்கி நாளை நள்ளிரவு 1.11 வரை உள்ளது. இதையொட்டி இன்று பிற்பகலில் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் சில மீட்டர் தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணி அளவில் ஜெல்லி மீன்கள் கடற்கரை நோக்கி அடித்து வரப்பட்டு ஆங்காங்கே கரை ஒதுங்கின. விஷத்தன்மை கொண்ட இந்த ஜெல்லி மீன்களால் கடலில் நீராடி கொண்டிருந்த பக்தர்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேருக்கு கை, கால் மற்றும் முதுகில் அலர்ஜியும் சிறு காயமும் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள், பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை கடற்கரையில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடலில் குளித்துக் கொண்டிருந்த பக்தர்கள் பதறியபடி வேக வேகமாக கரைக்கு திரும்பினர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக , கோவிலில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Jellyfish suddenly washed ashore on the Tiruchendur beach

இந்த ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு நொங்கு போல வழுவழுப்பாகவும், கண்ணாடி போலவும் இருப்பதால் பக்தர்கள் அதனை ஒருவகை கடல் பாசி என நினைத்தும் அதனை தொட்டு விடுகின்றனர். சிறுவர்கள் அதனை கையில் எடுத்து விடுகின்றனர். அதில் ஒரு சில வகை ஜெல்லி மீன்கள் அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது. ஜெல்லி மீன்கள் கடித்த உடன் உடலில் தடிப்பு மற்றும் அரிப்பு ஏற்பட்டு சிவப்பு நிறமாகி விடுகிறது. தீக்காயம் போல எரிச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே பக்தர்கள் கடலில் குளிக்கும் போதும், கால் நனைக்கும் போதும் ஜெல்லி வகை மீன்களைக் கண்டால் அவற்றைத் தொட வேண்டாம் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நாம் கேட்ட போது, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் ஜெல்லி வகை மீன்கள் ஆழ்கடலில் இருந்து கரைக்கு ஒதுங்குவது இயல்பான ஒன்று. காலநிலை மாற்றத்தினால், தற்போது கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் ஜெல்லி மீன்கள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக ஒதுங்கி வருகிறது என்றனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

Devotees sea Thiruchendur
இதையும் படியுங்கள்
Subscribe