/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jj.ni_.jpg)
சென்னை போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அருகே உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து வருபவர் ஹரிஹரன். இவர் சுதந்திர தினத்தன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்ய வந்த போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சாமி கும்பிட அங்கு வந்திருந்தார். அப்போது இருவருக்குமிடையே பூஜை செய்வது சம்பந்தமாகபிரச்சனை ஏற்பட்டது.
இதனால், தீபாவும், அவருடைய கணவன் மாதவனும் தன்னை பூஜை செய்யவிடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தீபா மீது ஹரிஹரன் புகார் அளித்தார். மேலும், அவர் விநாயகர் சிலையின் வெள்ளிக் கீரிடத்தை தீபா பறிக்க முயன்றதாக புகார் அளித்தார். இதனையடுத்து, அவர் பூஜை செய்வதற்கான செலவையும், அதற்கான மாத ஊதியத்தையும் சசிகலா கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தீபாவும், அவரது கணவரும் பூசாரி ஹரிஹரன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், “ பூசாரி ஹரிஹரன் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களின் தூண்டுதலின் பெயரில் புகார் அளித்துள்ளார். நான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசு என்பதால் அவர் சார்பாக அனைத்து கடமைகளும் செய்யும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. விநாயகர் சிலையின் வெள்ளி கீரிடத்தை நாங்கள் பறிக்க முயன்றதாக ஹரிஹரன் புகாரில் கூறியிருப்பது போல் எதுவும் நடக்கவில்லை. இனிமேல், போயஸ் தோட்டத்தில் உள்ள விநாயகர் சிலையை நாங்கள் பராமரித்து பூஜை செய்து கொள்கிறோம்.
இதுபோல் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களால் என் உயிருக்கும், உடமைக்கு ஆபத்து உள்ளது. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எனது பாட்டி வீடான வேதா இல்லத்திலோ அல்லது எங்கள் மற்ற பூர்வீக சொத்துகளிலோ உரிமை கொண்டாட எங்களால் அனுமதிக்க முடியாது. சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நான் கருதுகிறேன். அதனால், எனக்கும், எனது கணவருக்கும், குழந்தைக்கும், மற்றும் எனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)