JCB machines banned from operating without permission in Kodaikanal

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் கொடைக்கானலும் ஒன்று. இது 2 ஆயிரத்து 133 மீட்டர் உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இது மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இந்த மலைப்பகுதியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள் உள்ளன. இந்த சுற்றுலாத் தளத்தைக் காண, வார இறுதி நாள் விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் முறையான அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி (01.07.2025) முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அனுமதியின்றி ஜே.சி.பி. இயந்திரங்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று கொடைக்கானல் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.