ADVERTISEMENT

வேட்பாளர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆப்! - வாக்காளர்கள் வரவேற்பு!

06:27 PM Apr 15, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் மீது என்னென்ன குற்ற வழக்குகள் உள்ளன? என்ன கல்வித் தகுதி பெற்றிருக்கிறார்கள்? வருமான வரி பற்றிய தகவல்கள் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 863 வேட்பாளர்களின் தகவல்களைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுத்துத் தரக்கூடிய 'ஆப்' ஐ வெளியிட்டுள்ளது லஞ்ச ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கம்.

ADVERTISEMENT

இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் கேட்டபோது, "நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய அனைத்து வேட்பாளர்களின் மிக முக்கிய தகவல்களை எல்லாம் தொகுத்து வழங்கக்கூடியதுதான் இந்த 'ஆப்' எனப்படும் செயலியின் சிறப்பு.

பெரும்பாலும் ஒரு தொகுதியில் போட்டியிடக்கூடிய முக்கிய வேட்பாளர்களின் தகவல்களை மட்டும் தான் பெரும்பாலும் வெளியிடுவார்கள். ஆனால், ஒரு வாக்காளராக நமது தொகுதியில் யார்யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கான வழி கொஞ்சம் கடினம். அதற்கு, தேர்தல் ஆணைய இணையதளத்தின் உள்ளே சென்று அதில், கொடுத்திருக்கக்கூடிய ஒரு வேட்பாளரின் தகவல்களை எடுத்து பார்க்கவேண்டும் என்றால் நாற்பது , ஐம்பது பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் தான் அறிந்துகொள்ள முடியும்.

அதனால், நாம் அந்த அஃபிடவிட் எனப்படும் தேர்தல் வாக்குமூல பத்திரத்தில் அவர்கள் சொல்லி இருக்கக்கூடிய மிக முக்கிய தகவல்களான வயது, கடன் விவரம், சொத்து விவரம், குற்ற வழக்குகள், கல்வித் தகுதி போன்றவற்றை ஒருங்கிணைத்து மிக எளிய வடிவில் ஒரே பக்கத்தில் ஆப் மூலமாக வெளியிட்டுள்ளோம். இதை, யார் வேண்டுமானாலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒரு பத்து நிமிடம் நீங்கள் செலவு செய்தால் உங்கள் தொகுதியின் அனைத்து வேட்பாளர்களின் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்" என்றவரிடம் இந்த ஆப்பின் எதிர்காலம் பற்றி கேட்டபோது, "நிச்சயமாக இதில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களின் தகவல்கள். மேலும், நடக்கக்கூடிய எல்லா தேர்தல்களிலும் இந்த 'ஆப்' மூலம் தகவல்களைத் தொடர்ந்து வெளியிடுவோம். மேலும், லஞ்ச- ஊழல்- மோசடிகள் போன்ற தகவல்களைப் பின்னாளில் ஆதாரங்களுடன் வெளியிட இருக்கிறோம்.

இந்த, 'ஆப்' வெளியிட்டவுடன் மக்கள் எங்களுக்கு வேறு வேறு ஐடியாக்களையும் கொடுத்தார்கள். அதையெல்லாம் செய்வதற்கான எண்ணங்களில் உள்ளோம். மக்களுக்கும் எம்.எல். ஏ, எம்.பிக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கவும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்த 'ஆப்' மூலம் முயற்சிகள் நிச்சயமாக எடுப்போம்.


மக்களின் பிரச்சனைகளைக் கேட்கவும் அந்தந்த தொகுதியின் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை அவர்களுடன் பேசுவதற்கான தளமாகவும் இந்த 'ஆப்' பின்னாளில் நிச்சயம் அப்டேட் ஆகும்.


இந்த 'ஆப்' வெறும் பன்னிரண்டு நாட்களில் இருநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இரவும் பகலும் வேலை செய்து வெளிகொண்டுவரப்பட்டது. இதில், வெளிநாட்டு இந்தியர்களும் பங்குபெற்றனர்" என்றார்.

இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்த தீபாவிடம் கேட்ட போது "நாம் இந்த ஆப் தொடங்குவதற்கு முன் தன்னார்வலர்களைக் கேட்டறிந்தோம். அதற்கேற்ப, நமக்கு இருநூறு தன்னார்வலர்கள் பதிவு செய்தார்கள். அதில் இல்லதரிசிகள், மாணவர்கள், வேலைசெய்பவர்கள், வெளிநாட்டு இந்தியர்கள் என்று பலர் பங்கேற்றார்கள். அவர்களை மூன்று விதமாகப் பிரித்தோம்.

ஒரு குரூப் அஃபிடவிட்டில் இருக்கும் தகவல்களை டேட்டா என்ட்ரி செய்வார்கள். இன்னொரு குரூப் அந்த டேட்டாவை சரிபார்ப்பார்கள். மூன்றாவது குரூப் வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் சின்னத்தை டவுன்லோடு செய்வார்கள். இப்படித்தான், பன்னிரெண்டு நாட்களில் இந்த ஆப் உருவாக்கினோம்" என்றவரிடம் ஏதேனும் தவறு ஏற்பட்டதா? என்று நாம் கேட்டபோது, "பெரிய தவறுகள் எதுவும் ஏற்படவில்லை. ஒரே ஒரு வேட்பாளரின் கல்வி தகுதியில் மட்டும் பிழை வந்தது. அதை, வெளியிட்ட பத்தே நிமிடத்தில் சரி செய்து விட்டோம். வெளியிட்ட சற்று நேரத்தில் ஆப் பதிவிறக்கம் சற்று ஸ்லோவானது. அதுவும் பின்பு சரியாகிவிட்டது" என்றார் உற்சாகமாக.

தொழிநுட்ப துறையில் பணியாற்றிய சத்யா நம்மிடம், "ரொம்ப நாளா அறப்போர் இயக்கத்திற்கு 'ஆப்' ஒன்றை உருவாக்குதற்கான யோசனையிலிருந்தோம். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படியிருக்கும்போதுதான் வேட்பாளர்களின் தகவல்களைத் தொகுத்து 'ஆப்' ஒன்றை உருவாக்கலாம் என்றும் இந்த 'ஆப்'க்கு தேவையான தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தோம். முதல் இரண்டு நாட்கள் வேலை செய்தோம். ஒரு வேட்பாளரின் தகவலை முழுவதுமாக பதிவு செய்வதற்கு நமக்குக் குறைந்தது ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் செலவானது. இப்படியே, செய்தால் நேரத்திற்கு இந்த செயலியை வெளியில் கொண்டு வரமுடியாது என்று எண்ணி ப்ளானை மாற்றினோம்.

அஃபிடவிட்டில் இருக்கும் முக்கிய தகவல்களை மட்டும் திரட்டி அதை ' ஆப்'பில் பதிவு செய்தோம். அப்படிச் செய்ததால் பத்து நிமிடத்தில் ஒரு வேட்பாளரின் தகவல்களைப் பதிவு செய்து முடித்தோம். கூகுள் டிரைவ் மூலம் எல்லா தகவல்களும் பெறப்பட்டு அது ஒருவடிவில் மாற்றப்பட்டது. பின்பு அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் கொடுக்கப்பட்ட தகவல்களில் நிறைய எழுத்துப்பிழைகள் இருந்தன. அதை எல்லாம் சரி செய்யும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. நான், இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் நிலையில் அங்குச் சிலர் ஆப்பின் வடிவம் மற்றும் அதன் இதர வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நான் இங்கு முடித்துக் கொடுக்கும் தகவல்களை அவர்கள் அங்கு ஆப் இல் பதிவேற்றுவார்கள். ஸ்கீன் டெக் எனும் நிறுவனம்தான் இதை வடிவமைத்தார்கள். அருண்குமார் என்பவர்தான் அதன் நிறுவனர் அவரும் ஒரு தன்னார்வலர்தான். இதுவரையில் இந்த ஆப் 32, 000 திற்கும் மேலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT