முதியவரை ஏமாற்றி பாமகவிற்கு வாக்களிக்க வைத்த நபர்..! திமுக வேட்பாளர் புகார்..! 

jayangkondam old man vote issue dmk candidate made complaint

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, வரும் மே மாதம் 2ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுசென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் அந்த எந்திரத்தில் எந்த வாக்கும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று (09.04.2021) அதில் 15 வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு, மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், வாக்குப்பதிவு அன்று65 வயது முதியவர் ஒருவர் உதயசூரியன் சின்னம் எங்கே என வாக்குச்சாவடி மையத்தில் இருந்த நபரிடம் கேட்க, அவர் மாம்பழம் சின்னம்தான் உதயசூரியன் என முதியவரிடம் கூறி வாக்கை செலுத்தச் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

அதனைத் தொடர்ந்து, ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் கண்ணன், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ரத்னா, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அமர்நாத் ஆகியோரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தல் விதிமுறையின்படி வாக்களிக்கும் நபரை தவிர மூன்றாவது நபர் ஒருவர் உள்ளே செல்லுதல் தவறு. உள்ளே சென்று வாக்களிக்கும் இடத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டது தவறு. இதை அனுமதித்த தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

pmk
இதையும் படியுங்கள்
Subscribe