Jayalalithaa's personal life tarnished by 'Queen' web series! - Deepa's party chargesheet in the High Court

Advertisment

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி,அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில், ‘குயின்’ வெப் தொடரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் ஹைதரபாத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘குயின்’ என்ற இணைய தொடர் வெளியானது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணைய தொடருக்கும் தடை விதிக்கக் கோரி,ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வைத்து, ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கி வெளியான ‘குயின்’ இணைய தொடர்,தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அவருடைய குடும்பத்தார் மீதும், களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவின் தந்தை போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பது போல ‘குயின்’ தொடரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.