Jayalalithaa's death - Former MP to Chief Minister Maitreyan request!

அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் தனது அதிகாரப்பூர்வ் ஃபேஸ்புக் பக்கத்தில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களைப் பொறுத்தவரை ஜெயலலிதா இதயதெய்வம் மட்டுமல்ல குலதெய்வமாக பூஜிக்கப்படுகிறார். நானெல்லாம் ஜெயலலிதா நிழலில் மட்டுமே வளர்ந்தவன்.

Advertisment

2016 செப்டம்பர் 22- ஆம் தேதி உடல்நலம் குன்றி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது விரைவில் தேறி விடுவார் என்று தான் நம்பினோம். ஆனால் டிசம்பர் 5- ஆம் தேதி ஜெயலலிதாவின் திடீர் மரணம் அதிர்ச்சி அளித்தது. 2017 பிப்ரவரி 7- ஆம் தேதி அண்ணன் ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கிய போது ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்பது முக்கிய முழக்கமாக இருந்தது.

Advertisment

2017 பிப்ரவரி மாதம் என் தலைமையில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.

2017 ஆகஸ்டில் அணிகள் இணைந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது. அதையடுத்து 2017 செப்டம்பர் 25- ஆம் தேதி நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

Advertisment

90% விசாரணை முடிவுற்ற நிலையில், 2019 ஏப்ரலில் அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்திற்கு எதிராக தடையாணை பெற்றது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தடை காரணமாக எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவிடப்பட்டது தான் மிச்சம். 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 21- ல் வரிசை எண் 22- ல் 'ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து, தி.மு.க. ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, கடந்த ஜூலை மாதம் 27- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையினை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிகிறேன். ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அ.இ.அ.தி.மு.க. தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவான்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்யவும், அதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து சரியாக 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5- ஆம் ஆண்டு நினைவுநாள் வருகிறது.அதற்குள் முதலமைச்சர் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்." இவ்வாறு தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.