Advertisment

ஆளுநரின் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார் - அதிமுகவினருக்கு கி.வீரமணி அறிவுறுத்தல்

veeramani1

மாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்

ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா? அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா?

Advertisment

ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில ஆட்சியின் அதிகாரத்துக்குள் அத்துமீறி நுழைகிறார் -- இது மாநில உரிமையைச் சிறுமைப்படுத்துவது என்ற அடிப்படையில் மாவட்டங்களில் ஆய்வுக்குச் செல்லும் ஆளுநருக்கு திமுக கறுப்புக் கொடி காட்டுவது என்பது அதன் ஜனநாயகக் கடமையாகும். அத்தகையவர்களை கைது செய்வது - ரிமாண்ட் செய்வது கண்டிக்கத்தக்கது -- அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

Advertisment

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய பன்வாரி லால் புரோகித் ஆளுநராக தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் தன்னைப் பிரச்சினைக்குரியவராக ஆக்கி, விளம்பரம் பெறுவதில் ஆர்வம் உள்ளவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு வருகிறார்.

நடப்பது ஆளுநர் ஆட்சியா?

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவதுபோல மாவட்டம் தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆட்சி உண்மையிலே நடைபெற்ற கால கட்டங்களில்கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை. ஆனால் இந்த ஆளுநரோ சதா அந்த வேலையைச் செய்து கொண்டு இருக்கிறார்.

இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது.

அந்த வகையில் நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டிய திமுக தோழர்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்டும் செய்யப்பட்டது தவறானது - தேவையற்றதும்கூட!

இதனைக் கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை முன் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று (23.6.2018) நடைபெற்றது. அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மேனாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணியினர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஆளுநர்பற்றி அண்ணா சொன்னது என்ன?

மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு? என்று கேட்டவர் அறிஞர் அண்ணா அவர்கள். அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அதிமுக ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு!

அம்மா ஆட்சி என்போரே அம்மா எப்படி நடந்து கொண்டார்?

வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல் அமைச்சர் உள்ளிட் டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா? 1993 ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார். ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல் அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.

இதன்பிறகு 1995இல் மதுரை காமராசர் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டு. (அதே அ.தி.மு.க. ஆட்சிதான் அதற்கு நேர் மாறாக இப்பொழுது நடந்து கொள்கிறது) மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல் அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார்.

அம்மா புகழ் பாடும் அதிமுக அரசு - அந்த அம்மா நடந்து காட்டிய வழியையும் பின்பற்றவில்லை என்பது வெட்கக் கேடு!

குட்டக் குட்ட குனிந்தால்...

ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள திமுகவினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட் டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறோம். குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார் - செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம்.’’

K.Veramani i AIADMK evening tea boycotts Jayalalithaa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe