Skip to main content

ஆளுநரின் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார் - அதிமுகவினருக்கு கி.வீரமணி அறிவுறுத்தல்

Published on 24/06/2018 | Edited on 24/06/2018
veeramani1


மாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும்
ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா?  அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா?


ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில ஆட்சியின் அதிகாரத்துக்குள் அத்துமீறி நுழைகிறார் -- இது மாநில உரிமையைச் சிறுமைப்படுத்துவது என்ற அடிப்படையில் மாவட்டங்களில் ஆய்வுக்குச் செல்லும் ஆளுநருக்கு திமுக கறுப்புக் கொடி காட்டுவது என்பது அதன் ஜனநாயகக் கடமையாகும். அத்தகையவர்களை கைது செய்வது - ரிமாண்ட் செய்வது கண்டிக்கத்தக்கது -- அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்  கி. வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடிய பன்வாரி லால் புரோகித்  ஆளுநராக தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் தன்னைப் பிரச்சினைக்குரியவராக ஆக்கி, விளம்பரம் பெறுவதில் ஆர்வம் உள்ளவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு வருகிறார்.

 

நடப்பது ஆளுநர் ஆட்சியா?

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருந்து வருகையில், ஏதோ நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவதுபோல மாவட்டம் தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  ஆளுநர் ஆட்சி உண்மையிலே நடைபெற்ற கால கட்டங்களில்கூட எந்த ஓர் ஆளுநரும் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்ததில்லை. ஆனால் இந்த ஆளுநரோ சதா அந்த வேலையைச் செய்து கொண்டு இருக்கிறார்.

இதற்குத் தமிழ்நாட்டில் கடும் கண்டனம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக ஆய்வு செய்ய ஆளுநர் மாவட்டங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கறுப்புக் கொடி காட்டும் ஜனநாயகக் கடமையைச் செய்து வருகிறது.

அந்த வகையில் நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டிய திமுக தோழர்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்டும் செய்யப்பட்டது தவறானது - தேவையற்றதும்கூட!
இதனைக் கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை முன் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று (23.6.2018) நடைபெற்றது. அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர்  மு.க. ஸ்டாலின், மேனாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணியினர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

 

ஆளுநர்பற்றி அண்ணா சொன்னது என்ன?

மாநில ஆளுநர் மாவட்டம் தோறும், சென்று ஆய்வு நடத்துவதற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு முதுகெலும்பு அற்ற முறையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?  என்று கேட்டவர் அறிஞர் அண்ணா அவர்கள். அந்த அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்திருக்கும் அதிமுக ஆட்சி மாநில உரிமையைக் கொச்சைப்படுத்தும் ஓர் ஆளுநருக்கு ஆலவட்டம் சுழற்றுவது வெட்கக்கேடு!

அம்மா ஆட்சி என்போரே அம்மா எப்படி நடந்து கொண்டார்?

வார்த்தைக்கு வார்த்தை அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று லாலி பாடும் முதல் அமைச்சர் உள்ளிட் டோருக்கு அந்த அம்மா ஆளுநர் பிரச்சினையில் கடந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்ற தகவல் தெரியுமா? 1993 ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாளன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்  குண்டு வெடித்தது.   ஆளுநராக இருந்த சென்னாரெட்டி நேரடியாக சென்று கள ஆய்வு செய்தார். ஆளுநர் அங்கு சென்றதற்கு, முதல் அமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். 

 

இதன்பிறகு 1995இல் மதுரை காமராசர் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆளுநரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டு. (அதே அ.தி.மு.க. ஆட்சிதான் அதற்கு நேர் மாறாக இப்பொழுது நடந்து கொள்கிறது) மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை முதல் அமைச்சர் ஜெயலலிதா புறக்கணித்தார். 

 

அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்குப் போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார்.

அம்மா புகழ் பாடும் அதிமுக அரசு - அந்த அம்மா நடந்து காட்டிய வழியையும் பின்பற்றவில்லை என்பது வெட்கக் கேடு!

 

குட்டக் குட்ட குனிந்தால்...

ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ள திமுகவினர் மீதான வழக்கை ரத்து செய்து, ரிமாண்ட் செய்யப்பட் டவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறோம்.  குட்டக் குட்ட குனிந்து கொடுத்தால் இதற்கு மேலும் ஆளுநர் செய்வார் - செல்வார் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“டாக்டர் முடியலைன்னா விட்ருங்க...” - வைரலாகும் ஜெ-வின் ஆடியோ 

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

jayalalithaa old video goes viral

 

4 ஆண்டுகளுக்கு முன்பு ‘நக்கீரன்’ தளம் வெளியிட்ட ஜெயலலிதா திணறிப் பேசும் ஆடியோ  தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். 2016ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே போகிறது.

 

இந்நிலையில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் இருந்து நக்கீரன் தளம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வந்தது. அதில், ஜெயலலிதாவை அடக்கம் செய்யும்போது அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டிருந்தது என்று நக்கீரன் தளம் அந்த செய்தியை பகிரங்கமாக அம்பலப்படுத்தியது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை ஆதாரத்துடன் வெளியிட்டதை அடுத்து ஜெயலலிதா சிகிச்சை குறித்த அதிர்ச்சி ஆடியோ ஒன்றை வெளியிட்டது.  

 

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பலத்த மூச்சுத்திணறலுடன் மருத்துவருடன் 1 நிமிடத்திற்கு மேலாக பேசும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய  ஜெயலலிதா  “ OH SAD...எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க? ” என்று மருத்துவரிடம் கேட்க, அதற்கு அந்த மருத்துவர்  “ VLC  ரெக்கார்ட்ல மேடம்... அப்ளிகேஷன் டவுன்லோடு பண்றேன்” என பதிலளிக்கிறார். இதனையடுத்து  “இப்போ நான் சொல்றது கேக்குதா? அப்போ கூப்பிட்டேன்... ஆனா எடுக்க முடியலனு சொன்னீங்க” என கூறிய ஜெயலலிதா  “அய்யோ... அம்மா... நெஞ்சுல விசில் சத்தம் கேட்குது” என்று பதட்டத்துடன் பேசும் ஆடியோ கேட்போர் நெஞ்சை பதற வைத்தது.                                                                                                                                                                                           

மேலும், அவர் பேசும்போது  “எல்லாம் ஒண்னு கிடக்க ஒண்ணு பண்றீங்க... நீங்களும் சரியில்ல டாக்டர், எடுக்க  முடியலைன்னா  விடுங்க’’ என அந்த ஆடியோவில் ஜெயலலிதா பேசுகிறார். இந்த ஆடியோ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நக்கீரன் தளத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் லீக் ஆன இந்த ஆடியோவால் தமிழகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த ஆடியோ  அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Next Story

ஜெ. மரணத்தில் சிக்கும் சசிகலா; பரபரப்பை கிளம்பிய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Sasikala involved jayalalitha Arumugasamy Commission report

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோதே கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சந்தேக ரேகைகள் விழுந்தது.

 

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கினாலும், ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக ஆட்சி நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.

 

இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை எனக் கூறும் இந்த அறிக்கை, ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என பகீர் கிளப்பியுள்ளது.

 

மேலும், 2012-க்குப் பிறகு ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகும் கூட, இருவருக்கும் இடையே சுமூகமான உறவு நிலவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது எனவும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஆணையம்., ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு இருப்பதாக அதிர்ச்சி கொடுத்துள்ளது.

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டாலும் திமுக ஆட்சிக் காலத்திலும் நீடித்தது. பல முறை இந்த ஆணையம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிகவும் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ள இந்த அதிர்ச்சிகர அறிக்கை தற்போது வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.