Skip to main content

தமிழகத்தில் 4 ஆண்டுகளாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடத்தப்படாதது ஏன்?

Published on 21/02/2018 | Edited on 21/02/2018


 

jayalalitha 21


தமிழகத்தில் 4 ஆண்டுகளாக நடத்தப்படாத கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு இந்த ஆண்டு வரும் மார்ச் 5, 6, 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 5-ந்தேதி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், மார்ச் 6-ந்தேதி அன்று மாவட்ட கலெக்டர்களுக்கான கூட்டமும், மார்ச் 7-ந்தேதி அன்று காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13-ந்தேதிகளில் இந்த மாநாடு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் தலைமையில் நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.


2015-ம் ஆண்டில் அந்த வழக்கின் அப்பீல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றார். பின்னர் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அரசுத் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் இருந்தது. எனவே 2015-ம் ஆண்டிலும் டிசம்பர் மாதம் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.

 

edappadi palanisamy chief minister


 

2016-ம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி. மு.க. மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் அந்த ஆண்டில் டிசம்பர் 5-ந்தேதியன்று ஜெயலலிதா மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் 2016-ம் ஆண்டு டிசம்பரிலும் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.
 

அதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வின் புதிய ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும் பல்வேறு காரணங்களுக்காக 2017-ம் ஆண்டு டிசம்பரில் இந்த மாநாட்டை அரசு நடத்தவில்லை. இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் இந்த மாநாட்டை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்