Skip to main content

ஜெ., சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது?தீபா, தீபக்கிடம் நீதிபதிகள் கேள்வி

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

 


மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, ஜெயலலிதாவின் எண்ணமும் அதுதான் என்பதால் ஆட்சேபனை ஏதும் இல்லை என தீபா, தீபக் தெரிவித்துள்ளனர்.

 

d

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

d

 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகும்படி, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவருக்கும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

 

அதன்படி இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டாம் நிலை வாரிசுகள் இருந்தாலும், நிர்வாகியை நியமிக்கலாம் என வாதிட்டார்.

 

d

 

தொடர்ந்து நீதிபதிகள், புகழேந்தி வழக்கு தொடர்ந்த பிறகு, நீதிமன்றத்தை நாடியது ஏன்? மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறிய ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்க கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தீபக், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்திருந்ததால், தன்னை நிர்வாகியாக நியமிக்க கோரி வழக்கு தொடர காலதாமதம் ஏற்பட்டதாக  தெரிவித்தார்.

 

d

 

ஜெயலலிதாவின் சொத்துக்களில் சில பகுதிகளை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை எனவும், தன்னை அனுமதிக்காததால் தான், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை எனவும் தீபா பதிலளித்தார்.

 

தொடர்ந்து நீதிபதிகளிடம் முறையிட்ட தீபா, போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், போயஸ் தோட்ட இல்லத்துக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

 

இதையடுத்து, சட்டப்பூர்வ வாரிசுகளை அனுமதிக்காதது ஏன் என நீதிபதிகள் கேட்டதற்கு, இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெயலலிதாவின் நகைகள்; கர்நாடகா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Karnataka court action order on Jayalalithaa's Jewellery

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியில் இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 1999லிருந்து 96 ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த பொழுது அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது பெங்களூர் நீதிமன்றம். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஐந்து பெட்டிகளில் கர்நாடகா அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவதற்குப் பதிலாக வரும் மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி, கர்நாடகா வசம் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறியது. மேலும், இந்த வழக்கு செலவு கட்டணமாக ரூபாய் 5 கோடியை கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு செலுத்தவும் என்று கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை நாளை (06-03-24) தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருந்தது. 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ஜெயலலிதா வாரிசுகள் நாங்கள் தான். ஜெயலலிதா நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும். எனவே, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

Karnataka court action order on Jayalalithaa's Jewellery

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அளித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா நகைகளைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Next Story

சசிகலாவால் எனது உயிருக்கு ஆபத்து; ஜெ.தீபா பரபரப்பு புகார்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

J.Deepa complaint my life is in danger by sasikala

 

சென்னை போயஸ் தோட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அருகே உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து வருபவர் ஹரிஹரன். இவர் சுதந்திர தினத்தன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்ய வந்த போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சாமி கும்பிட அங்கு வந்திருந்தார். அப்போது இருவருக்குமிடையே பூஜை செய்வது சம்பந்தமாக  பிரச்சனை ஏற்பட்டது.

 

இதனால், தீபாவும், அவருடைய கணவன் மாதவனும் தன்னை பூஜை செய்யவிடாமல் தடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தீபா மீது ஹரிஹரன் புகார் அளித்தார். மேலும், அவர் விநாயகர் சிலையின் வெள்ளிக் கீரிடத்தை தீபா பறிக்க முயன்றதாக புகார் அளித்தார். இதனையடுத்து, அவர் பூஜை செய்வதற்கான செலவையும், அதற்கான மாத ஊதியத்தையும் சசிகலா கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், தீபாவும், அவரது கணவரும் பூசாரி ஹரிஹரன் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், “ பூசாரி ஹரிஹரன் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களின் தூண்டுதலின் பெயரில் புகார் அளித்துள்ளார்.  நான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசு என்பதால் அவர் சார்பாக அனைத்து கடமைகளும் செய்யும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. விநாயகர் சிலையின் வெள்ளி கீரிடத்தை நாங்கள் பறிக்க முயன்றதாக ஹரிஹரன் புகாரில் கூறியிருப்பது போல் எதுவும்  நடக்கவில்லை. இனிமேல், போயஸ் தோட்டத்தில் உள்ள விநாயகர் சிலையை  நாங்கள் பராமரித்து பூஜை செய்து கொள்கிறோம்.

 

இதுபோல் என் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களால் என் உயிருக்கும், உடமைக்கு ஆபத்து உள்ளது. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எனது பாட்டி வீடான வேதா இல்லத்திலோ அல்லது எங்கள் மற்ற பூர்வீக சொத்துகளிலோ உரிமை கொண்டாட எங்களால் அனுமதிக்க முடியாது. சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக நான் கருதுகிறேன். அதனால்,  எனக்கும், எனது கணவருக்கும், குழந்தைக்கும், மற்றும் எனது குடும்பத்திற்கும் உரிய  பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.