ADVERTISEMENT

ஜெ. மறைந்து 1000 நாட்கள் ஆனாலும் விலகாத மர்மங்கள்! கொதிக்கும் தொண்டர்கள்!

08:04 AM Sep 02, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் முன்னால் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மர்மமான முறையில் மறைந்து ஆயிரம் நாட்கள் கடந்துவிட்டது. ஆனாலும் அவர் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகாத நிலையிலேயே உள்ளது.

ADVERTISEMENT

ஜெ. மறைந்த போது அவரது சிகிச்சை தொடங்கி, அடக்கம் வரை உள்ள அத்தனை சந்தேகங்களையும் ஆதாரங்களுடன் நக்கீரன் வெளிக் கொண்டு வந்தது. அதனால் அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமின்றி எதிர்கட்சி தலைவர்களும் ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளது என்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க ஆட்சி அமைக்கும்போது முதல் கையெழுத்து ஜெ. மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடிப்பதே என்று மேடைக்கு மேடை பேசி வந்தார்.

நக்கீரன் அட்டைப்படம் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஓ.பி.எஸ். ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளது என்று தர்மயுத்தம் தொடங்கினார். இப்படி பலரும் சந்தேகங்களை கிளப்பினார்கள். நீதியரசர் ஆறுமுகசாமி கமிசன் உண்மையை வெளிக் கொண்டு வரும் என்று எடப்பாடி அரசு சொன்னது. ஆனால் 1000 நாட்கள் கடந்துவிட்டது. என்ன உண்மை வெளிக் கொண்டு வந்தார்கள்? இப்படித்தான் அ.தி.மு.க வின் அடிமட்டத் தொண்டர்கள், ஜெ விசுவாசிகள் கேட்கிறார்கள்.


இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் நெவளிநாதன் வெளி்ப்படையாகவே பேசினார்..

அம்மாவின் மரண முடிச்சு அவிழாவிட்டால்.... அதிமுக அழிந்து போகும் ! என்று தொடங்கியவர்.. தொடர்ந்து.. என்னை பொருத்தவரை அம்மா இறந்த பொழுது அதில் எந்த மர்மமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, காரணம் அம்மா அவர்களின் அறிவு, ஆற்றல் மீது எனக்கு இருந்த நம்பிக்கை.

எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க என்ற இந்த இயக்கமே இருக்காது என எல்லோரும் நம்பிய நிலையில் அனைத்தையும் பொய்யாக்கி எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு இந்த இயக்கத்தை இரும்பு கோட்டையாக நிர்வகித்து அவர் தலைமையில் 7 முறை தேர்தலை சந்தித்து அதில் 4 முறை அதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர் அம்மா அவர்கள்.


இப்படி தான் தலைமையேற்ற கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தவர் தனக்கான சூழலையும் சரியாகத்தானே வைத்து இருப்பார் என என்னை போலவே நிறைய தொண்டர்கள் நம்பினோம் . ஆனால் அடுத்த சில நாட்களில் கட்சியின் மூத்த தலைவர்களான முனுசாமி, ராஜ.கண்ணப்பன் உள்ளிட்ட தலைவர்களும் அம்மாவின் அண்ணன் மகள் தீபா போன்றவர்கள் எழுப்பிய சந்தேகங்கள், நக்கீரன் ஆதாரங்களுடன் எழுப்பிய சந்தேகங்கள் என்னைப் போன்ற தொண்டர்களை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டு சென்றது. அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட தொடங்கியது .

இப்படி எல்லோரும் ஒரு சந்தேகத்தை சுமந்து நின்ற வேலையில் சந்தேகமே வேண்டாம் அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என கூறி ஓ.பி.எஸ் அம்மா சமாதியில் அமர்ந்தார். அதன் பிறகு உலக அளவில் அம்மாவின் மரணத்தில் ஏதோ சதி இருக்கிறது என எல்லோரும் உறுதியாக நம்ப தொடங்கிவிட்டனர். ஓபிஎஸ் -ன் கூற்று சரிதான் என்பதை போல் ஆட்சிக்கு தலைமை ஏற்று இருக்கும் இபிஎஸ் அவர்கள் ஓபிஎஸ் அவர்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளையும் ஏற்று சசிகலா குடும்பத்தை வெளியேற்றி, அம்மா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார். ஆறு மாதத்தில் அம்மா அவர்களின் மரணம் குறித்து முழு உண்மையும் தெரிந்து விடும் என உலமே நம்பிய நிலையில் இன்று ஆயிரம் நாட்கள் ஆகியும் எந்த மர்மமும் விலகவில்லை என்பது என்னை போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது .


குறிப்பாக அம்மாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது அது குறித்து மறந்து விட்டாரோ என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் அம்மாவின் மரணத்திற்கு நீதி கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று வாய் மூடி மவுனியாக இருப்பதை தொண்டர்கள் ரசிக்கவில்லை சந்தேகிக்கிறார்கள். இதில் விரைவில் ஒரு முடிவை சொல்லாவிட்டால் தொண்டர்களுக்கு இன்றைய தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் அதன் தொடர்சியாக கட்சியும் கரைந்து விடும். எம்.ஜி.ஆரும், அம்மாவும் கட்டிக்காத்த இரும்பு கோட்டையில் ஓட்டை விழலாம்.

அம்மா அவர்கள் தன் மரணத்திற்கு பிறகும் இந்த கட்சி ஆயிரம் ஆண்டுகள் இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அவரின் மரண மர்மமே இந்த கட்சியை அழித்து விடுமோ என பயமாக இருக்கிறது.


மாநிலத்தில் நம் ஆட்சி, மத்தியில் நமக்கு ஆதரவான ஆட்சி.. பிறகு ஏன் விசாரணை தாமதம்? இதன் உண்மை தன்மை வெளிவருவது யாருக்கு பிடிக்கவில்லை? யாரை பாதுகாக்க இந்த தாமதம்? இப்படி பல கேள்விகளை சுமந்தே என்னைப் போன்ற அ.தி.மு.க தொண்டர்கள் ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டியுள்ளது என்றார்.

ஜெ. வின் மரணத்தில் உள்ள சந்தேகங்க முடிச்சுகளை அவிழ்க்க ஆயிரம் நாட்கள் போதவில்லையா? அவிழ்த்தால் வேறு பூதங்கள் கிளம்பும் என்பதால் ஆட்சியாளர்கள் அவிழ்க்க நினைக்கவில்லையா? மாற்றுக்கட்சி ஆட்சி வந்தால் தான் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா? என்ற தொண்டர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் இடத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் எடப்பாடி – ஓ.பி.எஸ் தான் பதில் சொல்ல வேண்டும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT