
மன்சூர் அலிகான் என்ன சந்திரனிலிருந்து குதித்தவரா? என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானை வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக காவல் துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்கான படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மன்சூர் அலிகான் கைது குறித்து கேட்ட போது,
மன்சூர் அலிகான் என்ன சந்திரனிலிருந்து குதித்தவரா? இல்லை சூரியனில் இருந்து குதித்தவரா? ஜனநாயகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது. யாராக இருந்தாலும் சரி ஒரு வரைமுறையோடுதான் பேச வேண்டும். கையை வெட்டுவது, காலை வெட்டுவது, குத்திவிடுவேன், கொலை பண்ணிவிடுவேன் என்கிற ரீதியில் பேசுவது பேச்சே கிடையாது. அப்படி பேசுவது தவறு. இப்படி பேசுபவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைதான்’’ என ஆவேசமாக கூறினார்.