Skip to main content

“57 வயதில் மரணம் ஏற்பட்டிருக்கக் கூடாது” - மயில்சாமியின் உடலுக்கு ஜெயக்குமார் நேரில் அஞ்சலி

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

Jayakumar personally paid tribute to Mylaswamy's body

 

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

மயில்சாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் பார்த்திபன், நடிகர் நாசர், ஜெயராம், நகைச்சுவை நடிகர் செந்தில் என பலரும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எல்லோரையும் சிரிக்க வைத்து, நகைச்சுவை உணர்வுடன் பழகும் தன்மையை பெற்று சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் மயில்சாமி. அவரை 57 வயதில் இழந்தது துரதிர்ஷ்டம். மயில்சாமியை பற்றி நான் பழகிய வரையில் சொன்னால், எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் பற்றும் பாசமும் கொண்டவர். 

 

எல்லோரையும் சிரிக்க வைக்கும் சூழலில், கூடவே தன்னை நாடி வருபவர்களுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என நினைப்பவர். மேலும், யாரும் பசித்து இருக்கக்கூடாது என நினைப்பவர். வேலை பார்க்கும் இடத்தில் யாராவது சாப்பிடவில்லை என்றால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து சாப்பிட்டு வாருங்கள் என்பார். 

 

57 வயதில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கக் கூடாது. இன்னும் 25 வருடக்காலம் அவர் வாழ்ந்திருந்தால் மக்கள் மகிழும் அளவு அவரது நடிப்பு வெளிப்பட்டு இருக்கும். அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்