Skip to main content

“ரூ. 6,000 கொடுப்பதை ரூ. 12,000ஆகக் கொடுக்க வேண்டும்” - ஜெயக்குமார் வலியுறுத்தல்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 Jayakumar insists Rs 6,000 should be given as Rs 12,000” -

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (09-12-23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவே இல்லை. வெள்ளம் வடிந்த பகுதிகளிலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. மேலும், சாலைகளில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. இந்த ஐந்து நாட்கள், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கின்றனர். மக்களின் இழப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. இந்த நேரத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவ வேண்டும் என்பது அரசின் கடமையாகும். 

அவர்களின் உடைமைகள், வாழ்வாதாரம் என அனைத்தும் போய்விட்டன. இதைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நாம் பல்லாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், அதைக் கூட பொருட்படுத்தாமல் அவர்களின் எதிர்பார்ப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்றைக்கு தமிழக அரசு ரூ.6,000 கொடுத்திருக்கிறது என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அந்த ரூ.6000 என்பதை ரூ.12,000 ஆக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

துணி தைத்து கொடுத்து அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24)  வடசென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெரம்பூர் வியாபாரிகள் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து அவர், ஓட்டேரியில் உள்ள தையல் கடையில் துணி தைத்துக் கொடுத்து வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு வாக்கு சேகரித்தார்.