/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeyakumar-dhanasingh-ccyv-art_0.jpg)
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் கடந்த 2 ஆம் தேதி டார்ச் லைட் வாங்கிச் செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இது குறித்து போலீசார் விசாரணையைத்தீவிரப்படுத்தினர். இதனையடுத்து ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் கண்டெடுத்த இடத்தில் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். அப்போது டார்ச் லைட் பேட்டரிகள் இரண்டு பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்டரிகள் இரண்டும் ஜெயக்குமார் தனசிங் திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் வாங்கிய டார்ச் லைட்டின் பேட்டரிகளா என விசாரணையைத்தொடங்கியுள்ளனர். அதே சமயம் இந்த இரண்டு பேட்டரிகளையும் போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeyakumar-dhanasingh-well-art_0.jpg)
முன்னதாக ஜெயக்குமாரின் செல்போன் அவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் கிடக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கிணற்றிலிருந்து கத்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கத்தி அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதா?. எங்கு வாங்கப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஜெயக்குமார் தனசிங் தனது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது கவனிக்கத்தக்கது.
Follow Us