Jayakumar cricitized kalaignar 100 function

தமிழ்த் திரையுலகம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரை கௌரவிக்கும் விதமாக, ‘கலைஞர் 100’ விழா தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் (06-01-24) நடைபெற்றது. சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ் குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, வடிவேலு, நயன்தாரா, நடிகை மற்றும் ஆந்திர அமைச்சரான ரோஜா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் பங்கேற்றுப்பேசினர்.

இந்த நிலையில், இந்த விழா குறித்து அதிமுக மூத்த தலைவரும்முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “எம்.ஜி.ஆர், கலைஞரால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதைப் போல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று முன்தினம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று.

எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

Advertisment

அவரது உதவியால்தான் கலைஞரே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைபிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்கச் சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே? இப்படி எல்லாம் நடக்கும் எனத்தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.