Jayakumar appearing in Chennai Central Crime Branch!

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் வெளிவந்துள்ளார். அதன்படி, திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த அவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அது தொடர்பான வழக்கில் இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ''ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 9 மாதங்கள் ஆகியும் சம்பள பிரச்சனை குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் தொடங்கப்படவில்லை. அதேபோல் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். காலங்காலமாக நடத்துநர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் பேட்டா கொடுப்பது வழக்கம். ஆனால் பெண்கள் பேருந்துகளில் (மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து) பயணம் செய்யும் நிலையில் அந்த பேருந்துகளில் பேட்டா கொடுப்பது கிடையாது. இப்படி முழுக்க முழுக்க தொழிலாளர் விரோத போக்கை விடியாதஅரசு கடைப்பிடிக்கிறது'' என்று விமர்சித்தார்.