Skip to main content

குடியுரிமை சட்டத்தால் முதலில் பாதிக்கப்படுபவரே முதல்வர் எடப்பாடி தான் - ஜவாஹிருல்லா விளாசல்!!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

"குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்போகிறார்களோ இல்லையோ, முதலில் பாதிக்கப்படப்போவது தமிழக முதல்வர் எடப்பாடி தான்," என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நாகூர் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை எதிர்த்து நாகூர் பஸ்நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் தலைமை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாவோ," மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ,என்ஆர்சி, என்பிஆர் ஆகிய மூன்று சட்டங்களும் இந்த நாட்டு மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட திரிசூலமாகும்.இதற்காக ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள கணக்கெடுப்பின்போது கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை என்றால் சந்தேக குடிமகன் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். எப்படி பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளின் வாசலில் காத்துக் கிடக்கும் ஆபத்து ஏற்பட்டதோ, அதுபோலவே சந்தேக குடிமகன் என்கிற பட்டியலில் இருந்து நம்மை நீக்க தாசில்தார் அலுவலகத்தில் காத்துக்கிடக்க வேண்டிய நிலையாகிடும்.

 

 Jawahirullah speech in nahoor


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தை சேர்ந்த 11 எம்பிக்கள் வாக்களித்தது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது என கூறுகிறார். இதன் பின்னர் இந்த சட்டத்தின் பேராபத்து குறித்து கூறியப்பின்னர், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் எங்களிடம் எடுத்துக் கூறுங்கள் என்று பேசுகிறார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்தால் முதலில் பாதிக்கப்படுபவரே தமிழக முதல்வர் பழனிசாமி தான் என்பதை அவர் மறுத்துவிட முடியாது. மத்திய அரசு இந்த சட்டத்தை இதற்கு முன்பு கொண்டு வந்திருந்தால் இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்க முடியாது. அவரால் அதிமுக என்ற கட்சியை உருவாக்கியிருக்க முடியாது. அதிமுக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி இன்று முதல்வராக இருந்திருக்கவே முடியாது என்பதை பழனிச்சாமி மறந்துவிடக்கூடாது.

இந்த சட்டத்தின் ஆபத்தை உணர்ந்து அண்டை மாநிலங்கள் போல் தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி தீர்மானம் நிறைவேற்ற வில்லை என்றால் தமிழக மக்கள் தீர்மானம் நிறைவேற்றிட வைப்பார்கள்" என்று பேசிமுடித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்