Advertisment

ஜவ்வாது மலையில் சிதிலமடைந்த கோட்டை-ஆய்வு செய்யுமா தொல்லியல்துறை?

javathu hill

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஜவ்வாதுமலை பகுதியில் வரலாறு தொல்லில் தடயங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகிறது. அண்மையில் ஜவ்வாதுமலையில் கீழ்பட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது மலையின் உச்சியில் கோட்டை இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச. பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் திருப்பதி, குமார், பெருமாள் ஆகியோருடன் ஆய்வு செய்யப்பட்டது.

Advertisment

கீழ்பட்டு கிராமத்தின் அருகே உள்ள உயர்ந்த மலையின் முகட்டில் கடினமான காட்டுவழியாக சென்றால் மேலே ஒரு கருங்கல் கட்டடத்தின் அடிப்பகுதி காணப்படுகிறது. அதன் அருகிலேயே ஒரு பெரிய பள்ளம் அகழி போல காணப்படுகிறது. சிறிது தொலைவில் மலையின் மேல் பகுதியில் கருங்கற்களால் ஆன கோட்டையின் சுவர் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு மலையின் வெளிப்புற கணவாய் பகுதியில் இருந்து மலையின் உள்புறம் உள்ள நிலவெளி பகுதிவரை வளைந்து செல்கிறது. இந்த கோட்டைச் சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது. மலை முகட்டில் உள்ள பாறையில் செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதி போன்றோ அல்லது நீர் வழிந்தோட புருவம் போன்று காடி எடுக்கப்பட்ட பகுதியும் காணப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து நேர் தெற்கில் இரண்டு மலைக்கு இடைப்பட்ட கணவாய் போன்ற அடர்ந்த காட்டுப்பகுதியும் அதற்கும் தெற்கில் புதுப்பாளையம், கீழ்குப்பம், மட்ட வெட்டு போன்ற ஊர்களும் தெரிகின்றன.

Advertisment

மலைப்படுகடாம் என்ற சங்க இலக்கியத்தில் செங்கத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த நன்னன் சேய் நன்னன் என்பனுடைய மலை நவிரமலை என்றும்,அதன் மீது கோட்டை அமைதிருந்தது என்றும் ஏற்கனவே பரிசில் பெற்ற கூத்தர்கள் பரிசில் பெற போகும் கூத்தருக்கு வழிகாட்டும் இலக்கியமாக அமைந்துள்ளது. இந்த இலக்கியத்தில் கூறப்படும் கோட்டையே தற்போது கண்டு பிடிக்கப்பட்ட கோட்டையாக இருக்கலாம் என்ற கருத்துக்களும்உள்ளது. ஏற்கனவே செங்கம் ரிஷபேஸ்வர் கோயில் கல்வெட்டும், ஜவ்வாதுமலையில் கிடைத்த நடுகல் கல்வெட்டுகளும் முறையே மலைபடுகடாம், நவிரமலை பற்றிய செய்திகளை உறுதிப்படுத்துபவையாக உள்ளன. தற்போது கிடைத்த கோட்டைப்பகுதி மேலும் நவிரமலை பற்றிய ஆய்வில் ஒரு மைல் கல்லாகும்.

மலைபடுகடாமில் கூத்தருக்கு ஆற்றுப்படுத்தும்போது, அதாவது வழிகாட்டும் போது கூறப்படும் பல நிகழ்வுகளும் நிலவியல் அமைப்புகளும் இக்கோட்டைக்கு செல்லும் வழியுடன் பெருமளவு ஒத்துவருகின்றது. குறிப்பாக கோட்டைக்கு அருகில் இருக்கும் அருவி, தேன் எடுக்கும் இளைஞர்கள், குச்சி ஊன்றி மலைக்கு செல்லுதல், பாம்புகள் எதிர்படுதல், தினை போன்ற உணவுவகைகள், காட்டுப்பன்றி, மலைவாழ் மக்களின் விருந்தோம்பல் உள்ளிட்ட பல இதற்குச் சான்றாக கூறலாம். மேலும் இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலும் ஜவ்வாதுமலையில் மேல்பட்டு-அத்திமலையில் கோட்டை இருக்கவேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது கிடைத்த இந்த கோட்டை இடிபாடுகள் சங்ககாலத்தில் நன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் என்ற நோக்கில் தற்போது மேலும் ஆய்வுகள் தொடர்கின்றன என்றும் ஜவ்வாதுமலையில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட இக்கோட்டைப்பகுதி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆய்வு செய்ய ஒர் அரியவாய்ப்பு என்றும் ச.பாலமுருகன் தெரிவித்தார்.

history thiruvannamalai
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe