Skip to main content

காவிரி நீர் வேணுமா? இப்படிப் போராடுங்க..! - ஜேம்ஸ் வசந்தனின் புதிய ஐடியா!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் முறையான தீர்வு கிடைக்காத நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு போராட்ட வடிவங்களில் அவர்கள் எதிர்ப்பைக் காட்டி வரும் சூழலில், தமிழ்த் திரையுலக இசையமைப்பாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் காவிரி பிரச்சனையை சர்வதேச விவாதமாக்கும் புதிய யோசனை ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் விரிவான கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 

Cauvery

 

அதில் கூறப்பட்டுள்ளதாவது..

காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள்.
 
April 10-ம் தேதி CSK-வின் முதல் match. 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் – ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிந்திக்க வேண்டும்.

இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன்.
 
இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை. அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை!
 
இது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை! போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட!
 
அந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 
இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, CSK-க்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது.
 
ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம். இவ்வாறு எழுதியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.