/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_147.jpg)
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் கடந்த 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாகத்தகவலறிந்த கல்லக்குடி காவல் நிலைய எஸ்.ஐ. இளங்கோவன் மற்றும் போலீசார் கீழரசூர் கிராமத்திற்குச் சென்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தல் செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக இருந்த அனைத்து பலகைகளையும் அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகு மதிய நேரத்தில் ஜல்லிக்கட்டு விடுவதாக தகவல் தெரிந்து இரண்டாவது முறையும் சென்று அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மீண்டும் மூன்றாவது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக தகவலறிந்த எஸ்.ஐ. இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்ற ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விழாக்குழுவினர் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் தடியடி நடத்திய போலீஸார் மீது சரமாரியாகக் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், எஸ்.ஐ. இளங்கோவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தாக்குதல் நடத்திய 10க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை செய்தனர். அதனைத் தொடர்ந்து எட்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதே போன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு விழா நடத்தியபோது தடியடி நடத்தி கலைத்த அப்போதைய லால்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மீதும் இப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)