jallikattu held in karur district kulithalai 

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளஆர்.டி.மலை என்கிற இராட்சண்டார் திருமலையில் 61-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நேற்று (17.01.2023) நடைபெற்றது. போட்டியை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து முதலில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கோவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் பங்குபெற்ற மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியில் 756 காளைகள் பங்குபெற்றன.இவற்றை அடக்க 362 காளையர்கள் களம் கண்டார்கள். போட்டியானது 5சுற்றுகளாக நடைபெற்றது. போட்டியில்காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களிடம்சிக்காமல் சென்ற காளைகளுக்கும் சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், சேர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. களத்தில் 59 மாடுபிடி வீரர்கள்காயமடைந்தனர். இதில் 11 வீரர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். களத்தில் சிவக்குமார் (வயது 21) என்பவரது கண்ணில் மாடு குத்தியதில் அவரது விழித்திரை கிழிந்து களத்திலேயே அவருக்கு பார்வை பறிபோனது.

இந்தப் போட்டியில் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 21 காளைகளை அடக்கி முதல் இடத்தைப் பெற்றார். இவருக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாட்டு மாட்டு காளை ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும், இவருக்கு விழாக்குழு சார்பில் வாஷிங் மெஷின் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.7 காளைகளை அடக்கி இரண்டாவதுஇடம்பிடித்த திருச்சி சாந்தாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு விழாக்குழு சார்பில்சோபா பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசு முதலைப்பட்டிகிராமம் கீரிக்கல்மேட்டைச்சேர்ந்த பால்காரர் செல்வம் என்பவரின் காளைக்கு ரூபாய் 10 ஆயிரம்ரொக்கமாக 6 பேர் கொண்ட நீதிமன்றக் குழுவினரால்வழங்கப்பட்டது.

Advertisment

விழாவில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தோகைமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை, திமுக கவுன்சிலர் சின்னையன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போட்டி நடக்கும் இடத்தை திருச்சி டிஐஜி மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியைக்காண சுமார் 50,000-க்கும்மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5மணிக்கு நிறைவுபெற்றது.