/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3536.jpg)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியில்ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆணையம் திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு அதன் அறிக்கையை அரசிடம்சமர்ப்பித்தது. இந்த அறிக்கை வெளியாகி தமிழ்நாட்டிலும், அதிமுகவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசிய ஒரு ஆடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், “சசிகலா உண்மை விரும்பியாக இருந்திருந்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்கிற கேள்வியே எழுந்திருக்காது. எனது தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற 3-வது நபருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாகத்தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் எனது தாய், அத்தையைப் பற்றி புகார் கூறியதாக சசிகலா கூறி இருப்பதில் உண்மை இல்லை. எனது அத்தைக்கு சசிகலாவால் ஆபத்து உள்ளது என்றே அப்போது புகார் அளிக்கப்பட்டது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சசிகலா அவர் மீதுள்ள தவறுகளையெல்லாம் மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறியுள்ளார்.
சசிகலா கூறுவது போல எனது அம்மா விஜயலட்சுமி, கலைஞரையோ, வாழப்பாடி ராமமூர்த்தியையோ போய் சந்தித்துப் பேசியதே இல்லை. சசிகலாவுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து பேசட்டும். எனது அம்மாவைப் பற்றிப் பேசினால் நன்றாக இருக்காது. உங்கள் மரியாதையைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எந்தத்தவறும் செய்யவில்லையென்றால் போலீசிடமும், கோர்ட்டிலும் நிரூபிக்க வேண்டும். மக்களிடமும் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எனக்கு காழ்ப்புணர்ச்சி என்றும், அத்தையைப் பற்றி எனது அம்மா தவறாகப் பேசினார் என்றும் தப்புத்தப்பாக விமர்சிப்பது சரியாக இல்லை. இதற்காக சசிகலா மீது சட்டரீதியான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.
அத்தைக்கு என்னைப் பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக்கை மட்டும் பிடிக்கும் என்று சொல்வதும் பொய். எங்கள் அத்தை அப்படிப்பட்ட ஆள் இல்லை. 1997ல் மத்திய சிறைச்சாலையில் நானும் தீபக்கும்தான் சென்று பார்த்தோம். இதுபோல் பலமுறை சந்தித்துள்ளோம். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால் சசிகலாவின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. சுதாகரன் திருமணம் நடந்து முடிந்ததும் எனது தந்தை இறந்து போனார். அதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல்தான் உள்ளது. இதேபோல் எத்தனையோ சந்தேகங்கள் அவர் மீது உள்ளது. எனது அத்தைக்கு ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும் சசிகலாவே காரணமாகும்.
அத்தையின் மரணத்தில் அவர்களது செயல்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எந்தத்தவறும் செய்யவில்லை என்றால் அத்தையைப் பார்க்க என்னை அனுமதிக்காதது ஏன்? கேமராக்களை அணைத்து வைத்ததற்கு காரணம் என்ன? அவர்களின் ஆதாயத்துக்காக அத்தையைத்தவறாகப் பயன்படுத்தினர். எல்லா உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும். எத்தனை காலம்தான் மறைத்து வைக்க முடியும். எனது குடும்பத்தைப் பற்றியும், எனது அம்மா பற்றியும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. சசிகலா இதோடு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். எனது தம்பியைக்கெடுத்து... எனது அப்பாவைக் கொன்று... எனது அத்தையைக் (ஜெயலலிதா) கொன்று எனது வாழ்க்கையை அழிச்சி, எனது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் சசிகலா அழித்துள்ளார். எனது அம்மாவின் சாவுக்குக்கூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர்தான் சசிகலா. எனது தம்பியை பிடித்து கைக்குள் வைத்திருக்கிறீர்கள். முதலில் அவனை விடுங்கள்.
அரசியலை விட்டு நீங்கள் (சசிகலா) விலக வேண்டும். எங்கிருந்து சம்பாதித்தீர்கள் இத்தனை கோடிகளை? தைரியமிருந்தால் என்னிடம் வந்து பேசுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம் எனப் பேசலாம். இத்தனை கோடிகள் எப்படி வந்தது என்பது பற்றி அ.தி.மு.க. தொண்டர்களும் தமிழக மக்களும் கேட்க வேண்டும். தமிழக அரசு, சசிகலா மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் நிச்சயமாக ஆபத்து உள்ளது. அதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன். எனது அம்மாவைப் பற்றிப் பேசியதற்கு சசிகலா பதில் சொல்லியே தீர வேண்டும்” இவ்வாறு தீபா ஆடியோவில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)