Advertisment

பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை இடமாற்றம் செய்தது ஏற்கத்தக்கது அல்ல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருக்கிறார். இது ஏற்க முடியாதது ஆகும்.

அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் முதன்மைப் பணி. தேவையான மருந்துகளை கோருவதை தவிர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதற்காக அவர்களை தண்டிப்பது அநீதி.

Advertisment

மருத்துவமனை கட்டிடம் பாழடைந்திருப்பதற்காக மருத்துவர்களை இடமாற்றம் செய்வது தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காதது. தமிழக அரசு மருத்துவர்களின் சேவையும், பொறுப்புணர்வும் பலமுறை நிரூபிக்கப்பட்டவை. எனவே, அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.